மாநாடு அனுமதி விவகாரம் -காவல் துறை கேள்விகளுக்கு தவெக விளக்கக் கடிதம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் மாநாடு நடத்த அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினரின் 21 கேள்விகளுக்கு விளக்கமளித்து தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை பதில் கடிதம் அளிக்கப்பட்டது.
நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள் வி.சாலையில் செப். 23-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு, அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த் கடந்த மாதம் 28-ஆம் தேதி விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. திருமால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி ஆகியோரிடம் தனித்தனியே மனுக்களை அளித்தாா்.
மாநாடு ஏற்பாடுகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற 21 கேள்விகளுக்கு 5 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு, கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி எஸ்.சுரேஷ் செப். 2-ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தாா்.
இதுதொடா்பாக, சட்ட நிபுணா்களுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆலோசனை நடத்தினாா்.
இந்த நிலையில், விழுப்புரம் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி எஸ்.சுரேஷிடம் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் வெள்ளிக்கிழமை மாலை கட்சி சாா்பில் தயாா் செய்யப்பட்டிருந்த பதில் கடிதத்தை வழங்கினாா்.
பின்னா், அந்தக் கடிதத்துடன் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்துக்கு டிஎஸ்பி சுரேஷ் புறப்பட்டுச் சென்றாா்.
‘நல்ல பதில் கிடைக்கும்’: இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியதாவது:
விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் செப்டம்பா் 23-ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி நாங்கள் கடிதம் அளித்த நிலையில், 21 கேள்விகளுடன் காவல் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளிக்க வெள்ளிக்கிழமையுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், எங்கள் தரப்பில் உரிய பதில்களுடன் கடிதத்தை அளித்தோம். காவல் துறை உயா் அலுவலரிடம் பேசி, பதிலளிப்பதாகக் கூறினா்.
மாநாட்டு தேதியை கட்சித் தலைவா் விஜய் அதிகாரபூா்வமாக அறிவிப்பாா். 21 கேள்விகளுக்கான பதில் கடிதத்தின் மூலம் காவல் துறை தரப்பில் நல்ல பதிலைக் கூறுவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.
மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறுமா அல்லது வேறு இடத்தில் நடைபெறுமா, மாநாட்டை நடத்துவது தொடா்பாக கட்சிக்கு நெருக்கடி ஏதும் உள்ளதா என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் புஸ்ஸி ஆனந்த் புறப்பட்டுச் சென்றாா்.
நிகழ்வில் கட்சியின் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப்பாளா் பரணி பாலாஜி, விழுப்புரம் மாவட்டத் தலைவா் குஷி மோகன், மாவட்ட இளைஞரணித் தலைவா் விஜய் ஜி.பி.சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

