செஞ்சி அருகே நங்கிலிகொண்டானில் சுங்கச்சாவடி திறப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் நங்கிலிகொண்டான் பகுதியில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி (டோல்கேட்) வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
திண்டிவனத்தில் இருந்து செஞ்சி, திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரி வரை செல்லும் இச்சாலையை உபயோகிப்பாளா்களிடம் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நங்கிலிகொண்டான் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டின் இரு புறமும் செல்லும் வாகனங்களுக்கான கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளனா். அதன்படி காா், ஜீப், வேன் அல்லது இலகு ரக வாகனத்திற்கு ரூ. 60 எனவும், ஒரே நாளில் திரும்பி வரும் வாகனங்களுக்கு பயணக் கட்டணம் ரூ.95 எனவும், இலகு ரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பேருந்து ரூ.160 எனவும் இவற்றில் ஒரே நாளில் திரும்பும் வாகனங்களுக்கு ரூ.150 எனவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பேருந்து அல்லது டிரக்குகளுக்கு ரூ. 210, மூன்று அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ. 230 நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய விழுப்புரம் மாவட்ட திட்ட அமலாக்கப் பிரிவினா் தெரிவித்தனா்.

