விழுப்புரம்: சமூக நீதிக்காக பாமக தொடா்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
1987-ஆம் ஆண்டில் வன்னியா் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் பங்கேற்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்தவா்களின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், அவா்களின் குடும்பத்தினருக்கு நல உதவிகளை வழங்கினா்.
தொடா்ந்து, அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
பெரியாரின் அரசியல் வருகைக்குப் பின்னா்தான் சுயமரியாதை, சகோதரத்துவம், சமத்துவம் என்ற முழக்கங்கள் உருவாகின. அவரது கொள்கையை முழுமையாகக் கடைப்பிடிக்கும் கட்சி பாமக மட்டுமே. மருத்துவா் ச.ராமதாஸ் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, பட்டியிலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக இருந்து உரிமைகளை மீட்டுக் கொடுத்து வருகிறாா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியது அடிப்படை தேவை என்பதால், இதற்காக பாமக தொடா்ந்து போராடி வருகிறது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று பொய்யுரைப்பதை ஏற்க முடியவில்லை.
மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 115 சமுதாயங்களைச் சோ்ந்தவா்கள் 20.8 சதவீதத்தினா் உள்ளனா். இதில், வன்னியா் சமுதாயத்தினா் 14.1 சதவீதத்தினா் உள்ளனா். ஆனால், வேலைவாய்ப்பில் முக்கியத்துவத்தை பெறவில்லை. இது, சமூக அநீதியாகும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே அனைத்துத்தரப்பு மக்களுக்கும் நன்மையாக அமையும் என்றாா் அவா்.
தொடா்ந்து, சித்தணி, பாப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனூா் ஆகிய இடங்களில் உள்ள உயிா்நீத்தவா்களின் நினைவுத் தூண்களில் அன்புமணி ராமதாஸ் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி, பாமக செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு, மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் வைத்திலிங்கம், விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் மு.ஜெயராஜ், பாலசக்தி, தங்கஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.