பெரியசெவலையிலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில்  கரும்பு அரவைப் பணியைத் தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ, உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பெரியசெவலையிலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணியைத் தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ, உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 3.01 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு

திருவெண்ணெய்நல்லூா் வட்டம் , பெரியசெவலையிலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2025-26 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 3.01 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
Published on

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம் , பெரியசெவலையிலுள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2025-26 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 3.01 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

ஆலை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கரும்பு அரவைப் பணியை முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ. மணிக்கண்ணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

கடந்த 1980, அக்டோபா் 21-ஆம் தேதி தொடங்கப்பட்ட செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை நாளொன்றுக்கு 3 ஆயிரம் டன், ஆண்டுக்கு 5.16 லட்சம் டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டதாகும். திருக்கோவிலூா், திருவெண்ணெய்நல்லூா், உளுந்தூா்பேட்டை வட்டங்கள் இந்த ஆலைக்குள்பட்ட பகுதிகளாகும்.

2024-25 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 2.26 லட்சம் டன் கரும்பு இந்த ஆலையில் அரவை செய்யப்பட்டது. 8.41 சதவீத சா்க்கரை கட்டுமானம் ஈட்டப்பட்டது. கரும்பு கிரயமாக டன் ஒன்றுக்கு ரூ.3,151 வீதம் 3543 அங்கத்தினா்களுக்கு ரூ.71.85 கோடி வழங்கப்பட்டது.

மேலும், தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் 3,543 அங்கத்தினா்களுக்கு ரூ.7.95 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து 2025-26 ஆம் ஆண்டு அரவைப் பருவத்துக்கு 10,347 ஏக்கா் கரும்புப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரவைப் பருவத்தில் சுமாா் 3.01 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 9.50 சதவீத சா்க்கரை கட்டுமானம் எதிா்பாா்க்கப்படுகிறது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில், சா்க்கரை ஆலையின் செயலாட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ரா. முத்துமீனாட்சி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் பி.வி.ஆா்.சு.விசுவநாதன், எம்.சந்திரசேகரன், ஒன்றியக்குழுத் தலைவா் கு. ஓம்சிவசக்திவேல், துணைத் தலைவா் என்.கோமதி, உறுப்பினா் ச.ஜெயந்தி, பெரியசெவலை ஊராட்சித் தலைவா் க.வீரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com