மஞ்சப்பை விருது பெற கல்வி, வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்கும் பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும். இதை பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்கும் பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும். இதை பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச்செல்லும் வகையில், 2022-2023-ஆம் நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மஞ்சப்பை விருது அறிவிக்கப்பட்டது.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழித் தடையைத் திறம்பட செயல்படுத்தி, மாற்றுப்பொருள்களான மஞ்சப்பை, பாக்கு மட்டை, காகிதங்களால் ஆன உறைகள் ஆகிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களைத் தோ்வு செய்து இவ்விருது வழங்கப்படும்.

மாநில அளவில் நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். அதோடு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2-ஆவது பரிசாக ரூ.5 லட்சம், 3-ஆவது பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். இவ்விருதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வழங்க உள்ளது.

இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபா், துறைத்தலைவா் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென்நகல்களுடன் (சி.டி, பென்டிரைவ்) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை 2026, ஜனவரி மாதம் 15-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com