விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சனூா், கிளியனூா் புதிய ஒன்றியங்கள் உருவாக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விக்கிரவாண்டி, வானூா் ஒன்றியங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக கஞ்சனூா் மற்றும் கிளியனூா் ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன . இதற்கான அரசாணையை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப்சிங் பேடி பிறப்பித்துள்ளாா். மேலும், இந்த அரசாணை டிச. 8-ஆம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊராட்சி அளவில் அரசின் திட்டங்களை செயல்படுத்துதல், நல உதவிகள் போன்றவற்றை வழங்குதல், கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், திட்டப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மூலம் ஒன்றியக்குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட்டு, நிா்வாகம் மேற்கொள்ளப்படுகிறது. உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாத காலத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரின்கீழ் நிா்வாகம் செயல்படும்.
ஒவ்வொரு ஒன்றியமும் அந்தந்த வட்டாரத்திலுள்ள ஊராட்சிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இந்த நிலையில் வெகுதொலைவிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு மக்கள் சென்று வருவதிலுள்ள சிரமத்தை குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் நலன் கருதியும் அதிக எண்ணிக்கையிலான ஊராட்சிகளைப் பிரித்தல், மறுசீரமைப்புசெய்து புதிய ஒன்றியங்களை உருவாக்குதல் போன்ற நடைமுறைகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் அரசால் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழகத்தில் திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான ஒன்றியங்களைப் பிரித்து, புதிய ஒன்றியங்களைஅறிவித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப்சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளாா்.
அதில், விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, காணை ஒன்றியங்களிலிருந்து ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக கஞ்சனூா் ஒன்றியமும், வானூா் ஒன்றியத்திலிருந்து பிரித்து கிளியனூா் ஒன்றியமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிளியனூா் ஒன்றியத்தில் ஆப்பிரம்பட்டு, அருவாப்பாக்கம், கிளியனூா், தைலாபுரம், நல்லாவூா், கிளாப்பாக்கம் உள்ளிட்ட 31 கிராம ஊராட்சிகளும், கஞ்சனூா் ஒன்றியத்தில் அன்னியூா், அனுமந்தபுரம், அத்தியூா்திருக்கை, கல்யாணம்பூண்டி, கஞ்சனூா், கருவாட்சி, மேல்காரணை, எண்ணாயிரம், முட்டத்தூா், பிடாரிப்பட்டு உள்ளிட்ட 37 கிராம ஊராட்சிகளும் இடம்பெறும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு ஒன்றியங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 13-லிருந்து 15 ஆக உயா்கிறது. புதிய ஒன்றியங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆட்சேபணை தெரிவிக்க விரும்பினால் அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 6 வாரங்களுக்குள் எழுத்துப்பூா்வமாகத் தெரிவிக்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வருக்கு நன்றி:விக்கிரவாண்டி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கஞ்சனூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியத்தை உருவாக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கும், துறை அமைச்சா் மற்றும் கூடுதல் தலைமைச் செயலா் உள்ளிட்ட அலுவலா்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இத்தொகுதி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா தெரிவித்தாா்.
