மேல்மலையனூரில் மாா்கழி ஊஞ்சல் உற்சவம்! திரளான பக்தா்கள் பங்கேற்பு!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து இரவு 11 மணிக்கு தில்லை காளியம்மன் அலங்காரத்தில் உற்சவ அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனா். நள்ளிரவு 12.10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கோயில் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினாா்.
விழுப்புரம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்.பி.சரவணன், விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கா்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மேல்மலையனூா் (பொ) சக்திவேல், அறங்காவலா் குழுத்தலைவா் ஏழுமலை, மேலாளா் சதீஷ், கணக்கா் மணி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

