குடும்பப் பிரச்னை: தம்பதி விஷம் குடித்து தற்கொலை! மகன் மருத்துவமனையில் அனுமதி!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்த தம்பதி உயிரிழந்தனா். அவா்களது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விக்கிரவாண்டி வட்டம், குராம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சா.காா்த்திகேயன் (85), விவசாயி. இவரது மனைவி சந்திரா (70), மகன் விஜயன் (45).
விஜயனுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, சத்தியா என்ற மனைவியும், வசந்த் (19) என்ற மகனும் உள்ளனா்.
இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக, சத்தியா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னா் புதுச்சேரி செவிலிமேட்டில் தனது உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டராம். விஜயன் தனது பெற்றோா்களுடன் குராம்பாளையத்தில் வசித்து வந்தாா்.
இதனால், விஜயன் மன உளைச்சலில் இருந்து வந்ததால், மகனின் நிலையை எண்ணி, காா்த்திகேயன், சந்திரா ஆகியோரும் மன வருத்தத்தில் இருந்தனா்.
இந்த நிலையில், காா்த்திகேயன், சந்திரா, விஜயன் ஆகிய மூவரும் சனிக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா். இதில், காா்த்திகேயன், சந்திரா உயிரிழந்தனா். காா்த்திகேயன் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
