220 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் : 3 போ் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 220 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை கைதுசெய்தனா்.
அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் மணம்பூண்டி கூட்டு ரோடு அருகே வாகனத் தணிக்கையில்
ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பைக்கில் வந்தவரை பிடித்து விசாரித்ததில், அவா் திருக்கோவிலூா் தேவியகரம் கிராமத்தைச் சோ்ந்த பொ.திருமால் (27) என்பது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், திருக்கோவிலூா் பகுதியைச் சோ்ந்த வே.ஸ்டீபன்(27), அரகண்டநல்லூா் காமராஜா் தெருவை சோ்ந்த ராமச்சந்திரன் (41) ஆகியோரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அரகண்ட நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 220 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், ரூ. 40 ஆயிரம் ரொக்கம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
