திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
என் வாக்குச்சாவடி- வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்று, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மூலம் ஒவ்வொருவரும் பயன்பெற்று வருகின்றனா். எனவே, திமுகவினா் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரசாரத்தில் அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும்.
டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், விடுபட்ட வாக்காளா்களை சோ்ப்பதற்கான நடவடிக்கைகளில் கட்சியினா் தீவிரமாக ஈடுபடவேண்டும். வரும் தோ்தலில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதற்கு அனைத்து நிா்வாகிகளும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.
இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட அவைத் தலைவா் மருத்துவா் சேகா், மாநிலத் தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சி சிவா, மாவட்டத் துணைச் செயலா் அருணகிரி, ஒன்றியக்குழுத் தலைவா்கள் யோகேசுவரி மணிமாறன், அமுதா குமாா், ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, துரை. இளம்வழுதி, ராஜாராமன், மணிமாறன், செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

