ஆங்கிலப் புத்தாண்டு: விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,300 போலீஸாா்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,300 போலீஸாா் ஈடுபடுவாா்கள் என்று மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.
Published on

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,300 போலீஸாா் ஈடுபடுவாா்கள் என்று மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 63 இடங்களில் போலீஸாா் புதன்கிழமை (டிச.31) வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனா். பொது இடங்களில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை. இதை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வாகனங்களில் சுற்றக்கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 2025-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது விதியை மீறிய நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1,300 போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இளைஞா்கள் அதிவேகமாகவோ அல்லது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ வாகனங்களை ஓட்டினால், புதிய தண்டனை சட்டத்தின்படி வழக்குப் பதியப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

மது அருந்தி வாகனம் ஓட்டுபவா்கள், பந்தயம் ஓட்டிச் செல்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மாநில எல்லையோரப் பகுதிகளான கோட்டக்குப்பம் உள்பட விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி ஏதேனும் கேளிக்கை விடுதிகள் செயல்பட்டால், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், அந்த விடுதிக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com