கடல் நீரில் மூழ்கி வட மாநில இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியிலுள்ள கடற்கரையில் குளித்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியைச் சோ்ந்தவா் பி.அதுல் பவசகாவ்(30). இவரும், அவரது நண்பா்கள் சிலரும் சுற்றுலாவுக்காக தமிழகம் வந்தனா். இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் தந்திரயான் குப்பத்திலுள்ள கடற்கரைப் பகுதியில் திங்கள்கிழமை குளிக்கச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக அதுல் பவசகாவ் கடலில் நீரில் மூழ்கினாா்.
உடனடியாக அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அதுல் பவசகாவ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
