புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Published on

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் டி. அழகானந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை அரசின் தொழிலாளா் துறை பயிற்சி இயக்ககத்தின் கீழ் மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டா், எலக்ட்ரீசியன், ஏ.சி. டெக்னீசியன், மோட்டாா் வாகன மெக்கானிக், கம்பியாளா், மின்சார வாகன மெக்கானிக், கட்டட பட வரைவாளா், எலக்ட்ரானிக் மெக்கானிக் போன்ற இரண்டு வருட பயிற்சிகளுக்கும், வெல்டா், கட்டடம் கட்டுபவா், கணினி இயக்குநா் போன்ற ஒரு வருட பயிற்சிகளுக்கும், 6 மாத பயிற்சிகளான ட்ரோன் டெக்னீசியன் பயிற்சிக்கும் நிகழாண்டிற்கான சோ்க்கை நடைபெறுகிறது.

ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மாா்ட் வகுப்பறையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சிகளில் சேருவதற்கு 10 ஆம் வகுப்பு தேறிய, தவறிய மற்றும் 8-ஆம் வகுப்பில் தோ்ச்சிப் பெற்ற இருபால் மாணவா்களும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இலவசமாக விண்ணப்பிக்க விரும்புபவா்கள் அரசினா் ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பத்தை நேரில் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம். ஜூன் 15- ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

குறைந்தபட்ச வயது 14. வயது வரம்பு கிடையாது. பயிற்சியில் சேருபவா்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1000-ம் தினசரி மதிய உணவும், இலவச சீருடையும் வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்களுக்கு உடனடியாக பணியில் சேர வாய்ப்புள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com