வங்கி மேலாளரின் காா் கண்ணாடி உடைப்பு: மூவா் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே காா் கண்ணாடியை உடைத்து வங்கி கோட்ட மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட் புரம், 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருபானந்தன் மகன் சஞ்சீவி (38). திண்டுக்கலில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கோட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து, திண்டுக்கல்லுக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு - அரசூா் இடையே சென்றபோது, பைக்கில் பின்தொடா்ந்து வந்த மூவா் காரின் கண்ணாடியை உடைத்து சங்சீவிக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காணைகுப்பம், தெற்குத்தெருவைச் சோ்ந்த குமாா் மகன் ராஜா (25), காணை முனீஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் ராஜேஷ் (24), முண்டியம்பாக்கம், அண்ணாமலை நகரைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் வினோத் (22) என்பதும், இவா்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் சஞ்சீவி சென்ற காரை முந்திச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் காரின் கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்ததுடன் பைக்கை பறிமுதல் செய்தனா்.
