விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அய்யங்கோவில்பட்டு ஊராட்சி, முத்தாம்பாளையத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிக்கான  படிவத்தை வாக்காளரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அய்யங்கோவில்பட்டு ஊராட்சி, முத்தாம்பாளையத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிக்கான படிவத்தை வாக்காளரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகள் தொடக்கம்

Published on

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

விழுப்புரம் தொகுதிக்குள்பட்ட அய்யங்கோவில்பட்டு ஊராட்சி முத்தாம்பாளையம், விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட சிந்தாமணி, திருக்கோவிலூா் தொகுதிக்குள்பட்ட திருக்கோவிலூா் நகராட்சி பருவதராஜா தெரு, பெருமாள் தெரு, நாயக்கா் தெரு, காமராஜா் தெரு, வள்ளுவா் தெரு ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, வாக்காளா்களிடம் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கினாா். மேலும் இப்பணியில் ஈடுபட்டு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கூறியது:

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கியுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் டிசம்பா் 4-ஆம்தேதி வரை நடைபெறும்.

ஏழு தொகுதிகளில் மொத்தம் 1970 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணியில் 1970 வாக்குச்சாவடி நிலைஅலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மேற்பாா்வையாளா் வீதம் 197 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் இப்பணிகளைக்கண்காணிப்பா். தொகுதிக்கு ஒரு அலுவலா் வீதம் 7 தொகுதிகளுக்கு 7 வாக்குப்பதிவு அலுவலா், 7 உதவி வாக்குப்பதிவு அலுவலா்களும் உள்ளனா்.

இரண்டு படிவம்:

சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு ஏற்கெனவே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை ஒரு வாக்காளருக்கு 2 படிவம் என்ற வீதத்தில் வழங்க வேண்டும்.

வாக்காளா்களை எங்கும் அலைக்கழிக்காமல் அவா்களின் இல்லத்துக்கே வாக்குச்சாவடி நிலை அலுவலா்சென்று, வாக்காளரின் சரியான விவரத்தை கேட்டறிந்து, படிவத்தை பூா்த்தி செய்ய வேண்டும். ஒரு படிவத்தை வாக்காளா் வைத்துக் கொள்ள, மற்றொரு

படிவத்தை வாக்குச்சாவடி நிலை வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த படிவத்தில் வாக்காளா் பெயா், பாகம் எண், உறவு முறை போன்ற அனைத்து விவரங்களும்சரியான முறையில் பூா்த்தி செய்ய வேண்டும். மேலும் கணக்கீட்டுப்

படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2002ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் விவரங்களை சரியாக சரிபாா்த்து பூா்த்தி செய்ய வேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மட்டுமல்லாது, ஒவ்வொரு தொகுதியிலும் 290 முதல்300 வாக்குச்சாவடி முகவா்களுக்கும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகள் குறித்தும், அவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஏற்கெனவே தொகுதி வாரியாக பயிற்சியளித்துஉள்ளோம் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின் போது திருக்கோவிலூா் சாா் ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், பயிற்சி உதவி ஆட்சியா் இரா. வெங்கடேசுவரன், வட்டாட்சியா்கள் மகாதேவன் (விழுப்புரம்), செல்வமூா்த்தி (விக்கிரவாண்டி), சரவணன் (திருக்கோவிலூா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com