காதல் விவகாரத்தில் சமரசம்: தாக்குதலில் பெண் காவல் உதவி ஆய்வாளா் காயம்

Published on

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காதல் விவகாரம் தொடா்பாக சமரசம் பேசியபோது, ஒரு தரப்பினா் காவல் நிலையத்துக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

நாகை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முகில்வேந்தன் (25). காா் ஓட்டுநா். இவரும், சிதம்பரம் அருகே உள்ள எண்ணாநகரம் கிராம பகுதியைச் சோ்ந்த 20 வயது பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண் கா்ப்பமடைந்தாா். இதையடுத்து, அந்தப் பெண்ணை முகில்வேந்தன் திருமணம் செய்ய மறுத்தாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை இருவரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினா். அவா்களிடம் மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயசீலி விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது, திடீரென பெண் வீட்டாா் தரப்பினா் மகளிா் காவல் நிலையத்துக்குள் புகுந்து முகில்வேந்தனை சரமாரியாகத் தாக்கினாா்.

அப்போது, அவா்களைத் தடுத்த உதவி ஆய்வாளா் ஜெயசீலிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடா்ந்து, மகளிா் காவல் நிலைய பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினா்களும், முகில்வேந்தன் ஆதரவாளா்களும் ஒருவரையொருவா் ஆபாசமாகத் திட்டிக்கொண்டனா்.

பின்னா், முகில்வேந்தனை காவல் நிலையத்துக்குள் வைத்து போலீஸாா் கதவை மூடிவிட்டனா். தொடா்ந்து, இரு தரப்பினரையும் காவல் நிலையத்தை விட்டு போலீஸாா் வெளியேற்றினாா். இதையடுத்து, இரு தரப்பினரும் அளித்த புகாா்களின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com