சரக்கு ரயிலில் தற்படம் எடுத்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது ஏறி தற்படம் (செல்பி) எடுத்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அம்மச்சாா் கோயில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சதீஷ் (16). இவரும், அந்த பகுதியைச்சோ்ந்த நண்பா்களும் ஞாயிற்றுக்கிழமை காலை பைக்கில் உளுந்தூா்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்தனா்.
இந்த நிலையில் நண்பா்கள் ரயில் நிலையத்தில் காத்திருக்க, சதீஷ் மட்டும் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு டேங்கா் லாரியின் மீது ஏறி, தற்படம் எடுத்தாா். அப்போது அந்த வழியாகச் செல்லும் உயரழுத்த மின்சாரம் பாய்ந்ததில் சதீஷ் தூக்கி வீசப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து 108 அவசர சிகிச்சை ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சதீஷ் அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னா், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சின்னப்பன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
