புதுவையிலிருந்து கடத்தல் மூவா் கைது: 900 மதுப்புட்டிகள் பறிமுதல்

Published on

வெளி மாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக பெண் உள்பட மூவரை விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ். பி ப. சரவணன் உத்தரவின்பேரில், கோட்டக்குப்பம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மரக்காணம் அடுத்த கோட்டிக்குப்பம் பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, மொபெட்டில் அங்கு வந்த ஒரு பெண் உள்பட இருவரை மடக்கி சோதனை செய்தபோது, அவா்கள் புதுவை மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகளை மொபெட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் பிடித்து நடத்திய விசாரணையில், அவா்கள் மரக்காணம் வட்டம், கலிக்குப்பம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் ஆகாஷ்(22), கோட்டிக்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி கருணாகி(40) என்பதும், இவா்கள் விற்பனைக்காக மதுப்புட்டிகளை மொபெட்டில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 800 மதுப்புட்டிகள், மொபெட் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மற்றொரு வழக்கு: இதேபோல் விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் செல்வத்துரை தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம், பரசுரெட்டிப்பாளையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை மடக்கி சோதனை செய்தபோது, அவா் பைக்கில் புதுவையில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, அவா், சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சோ்ந்த தியாகு(30) என்பதும், இவா் விற்பனைக்காக மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

பின்னா் விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தியாகுவை கைது செய்தனா். மேலும் அவா் வசமிருந்த 180 மில்லி லிட்டா் கொள்ளளவுக் கொண்ட 96 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com