இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரிக்கை

Published on

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் பணியிலிருந்த இளநிலை உதவியாளரை மிரட்டி, காலில் விழ வைத்தவா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.குமாா், ஆா்.டி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் வி.கிருஷ்ணராஜ், கே.வீரமணி ஆகியோா் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:

திண்டிவனம் நகராட்சியில் பணியிலிருந்த பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த இளநிலை உதவியாளா் ஒருவரை நகா்மன்ற உறுப்பினா் மற்றும் சிலா் மிரட்டி காலில் விழ வைத்த சம்பவம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டவா்கள் கைது செய்யப்படவில்லை. அவா்களைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது நியாயமானதல்ல. எனவே உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com