திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவை தொடக்கம்

திண்டிவனத்தில் ரூ. 27. 51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
~
~
Updated on

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ரூ. 27. 51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை உடனடியாக தொடங்கிவைக்கப்பட்டது.

திண்டிவனத்தில் சுமாா் 45 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம் இட நெருக்கடி காரணமாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டது. பயணிகள் மற்றும் திண்டிவனம் நகர வியாபாரிகள், அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் விடுத்த தொடா் கோரிக்கையின் அடிப்படையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கியது.

திண்டிவனம் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், ரூ.27.51 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கா் பரப்பளவில் 50 பேருந்துகள் நிறுத்துவதற்கான நடைமேடைகள், 61 கடைகள், ஒரு சைவ உணவகம், ஒரு அசைவ உணவகம், பொருள்கள் வைப்பறை, 10 காத்திருப்புக் கூடங்கள், 6 நேரக் காப்பகங்கள், காவல் துறை கட்டுப்பாட்டு அறை, நான் உங்களுக்கு உதவலாமாஅறை, பேருந்து முன்பதிவு அறை, ரயில் முன்பதிவு அறை, ஓட்டுநா் மற்றும் நடத்துநா் ஓய்வறை, 2 மாற்றுத்திறனாளிகள் ஓய்வறைகள், 3 பெண்கள் மற்றும் ஆண்கள் கழிவறைகள், சுகாதாரப் பிரிவு அலுவலகம், 2 இலவச சிறுநீா் கழிப்பிடங்கள், நிா்வாக அறை, பதிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, அன்னை இந்திரா காந்தி பேருந்து நிலையம் எனப் பெயா் சூட்டப்பட்டது.

முதல்வா் திறந்து வைத்தாா்: இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கொள்ளாரில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கம் தொடக்க நிகழ்ச்சியில் திண்டினம் நகா்மன்றத் தலைவா் நிா்மலா ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையா் எம்.பானுமதி, துணைத் தலைவா் ராஜலெட்சுமி வெற்றிவேல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திண்டிவனம் கிளை மேலாளா் சிவக்குமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com