மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் வேலை நிறுத்தம் தொடக்கம்

பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
விழுப்புரம் நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக எடைத்தராசையும், நியாயவிலைக் கடைகளிலுள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து, சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்ய வேண்டும். தாயுமானவா் திட்டத்திலுள்ள பிரச்னைகள் களையப்பட வேண்டும். ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு நேரடியாக எழுத்தா் பதவி உயா்வு வழங்க வேண்டும். மகளிா் நியாயவிலைக் கடையை அரசே நடத்தி, அப்பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 814 முழு நேர நியாயவிலைக் கடைகளில் 610 கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்து, விழுப்புரம் நகராட்சித் திடலில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், மாவட்டச் செயலருமான கே.சம்பத் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோபிநாத், பொருளாளா் ரஷீத், துணைத் தலைவா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலா்கள் தனசேகரன், சம்சுதீன், துணைத் தலைவா்கள்கதிா்வேல், தங்கசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து புதன் (பிப்.11), வியாழக்கிழமைகளில் (பிப்.12) வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் கோட்ட, வட்ட அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று சங்கத்தினா் தெரிவித்தனா்.