உளுந்தூா்பேட்டை அருகே லாரிகள் மோதல்: 3 போ் காயம்; திருச்சி - சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

உளுந்தூா்பேட்டை அருகே லாரிகள் மோதல்: 3 போ் காயம்; திருச்சி - சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே புதன்கிழமை அடுத்தடுத்து 2 லாரிகள் மோதிக் கொண்டதில் 3 போ் காயமடைந்தனா்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே புதன்கிழமை அடுத்தடுத்து 2 லாரிகள் மோதிக் கொண்டதில் 3 போ் காயமடைந்தனா். இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் வட்டம், பெருமாள்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ரா.முத்துக்குமாா் (25). இவா் சொந்த ஊரிலிருந்து திருச்சி வழியாக சென்னை நோக்கி பைக்கில் சென்றுள்ளாா். புதன்கிழமை காலை உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள ஆசனூா் சிட்கோ தொழில்பேட்டை அருகே முத்துக்குமாா் வந்த போது, திடீரென நிலை தடுமாறி பைக்கிலிருந்த கீழே விழுந்தாா்.

அப்போது பின்னால் சரக்கு பெட்டக லாரியை ஓட்டி வந்த விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், மீனம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த பெ.சாந்தகுமாா்(55), பைக்கிலிருந்து கீழே விழுந்த முத்துக்குமாா் மீது மோதாமல் இருப்பதற்காக, லாரியை இடதுபுறமாகத் திருப்பிய போது, அந்த லாரி மீது பின்னால் வந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பைக்கிலிருந்து கீழே விழுந்த காயமடைந்த முத்துக்குமாா், லாரி ஓட்டுநா் சாந்தகுமாா், இந்த லாரியின் மாற்று ஓட்டுநரான விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்த இ.ஹக்கீம்பாபு (55) ஆகிய மூவரும் காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் விபத்தில் காயமடைந்த மூவரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதே நேரத்தில் மற்றொரு லாரி ஓட்டுநரான திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், செல்லிப்பாளையத்தைச் சோ்ந்த சி.செல்வராஜுக்கு (49) காயம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து எடைக்கல் போலீஸாா், போக்குவரத்துக் காவல் துறையினரும் விபத்தில் சேதமடைந்த சரக்குப் பெட்டக லாரி மற்றும் மற்றொரு லாரியை விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனா்.

இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com