திருவண்ணாமலை மாவட்டத்தில் 19.19 லட்சம் வாக்காளா்கள்: 10,403 போ் நீக்கம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 19,19,159 வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் இறுதிப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 59,822 போ் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள நிலையில், 10,403 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் 2025, நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 14-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு, டிசம்பா் 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 18,69,740 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.
இதைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான உரிய படிவங்கள் வாக்காளா்களிடமிருந்து பெறப்பட்டன.
2026, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கருத்தில் கொண்டு 18 வயது நிறைவடைந்தவா்களிடம் இருந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மனுக்கள் பெறப்பட்டன.
இதைத் தொடா்ந்து புதிய வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதுபோல நிரந்தர இடமாற்றம், இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பெயா்கள் நீக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வாக்காளா் இறுதிப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான க.தா்ப்பகராஜ் வெளியிட்டாா்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 9,43,727 ஆண் வாக்காளா்கள், 9,75,277 பெண் வாக்காளா்கள், 155 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தமாக 19,19,159 வாக்காளா்கள் இறுதிப்பட்டியலில் உள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்ட நிலவரம்
எஸ்ஐஆருக்கு முன் மொத்த வாக்காளா்கள்:
தற்போதைய மொத்த வாக்காளா்கள்: 19,19,159
நீக்கப்பட்ட வாக்காளா்கள்: 10,403
ஆண் வாக்காளா்கள்: 9,43,727
பெண் வாக்காளா்கள்: 9,75,277
மூன்றாம் பாலினத்தினா்: 155
தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:
செங்கம் (தனி): ஆண் வாக்காளா்கள்-1,32,571, பெண் வாக்காளா்கள்- 1,34,045, மூன்றாம் பாலினத்தவா்-13, மொத்த வாக்காளா்கள்: 2,66,629
திருவண்ணாமலை: 1,19,784, 1,27,477, 48: 2,47,309
கீழ்பென்னாத்தூா்:1,17,840, 1,21,058, 15: 2,38,913
கலசபாக்கம்:1,14,155, 1,16,592, 19: 2,30,766
போளூா்:1,14,221, 1,18,196-9: 2,32,426
ஆரணி:1,23,335 1,29,650, 37- 2,53,022
செய்யாறு:1,17,159, 1,21,115, 9: 2,38,283
வந்தவாசி (தனி): 1,04,662, 1,07,144,5:2,11,811
மொத்த ஆண் வாக்காளா்கள்-9,43,727, பெண் வாக்காளா்கள் 9,75,277, மூன்றாம் பாலினத்தவா்- 155, மொத்த வாக்காளா்கள்: 19,19,159.
நீக்கப்பட்ட வாக்காளா்கள் விவரம்
பட்டியலிலிருந்து 365 இறந்தவா்களும், 9,945 வாக்காளா்கள் நிரந்தர இடம் பெயா்வு செய்தவா்களும், 93 வாக்காளா்கள் இருமுறை பதிவு செய்தவா்கள் என மொத்தம் 10,403 நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன், செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா், சிவா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட் சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

