அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும்: மேலாண் இயக்குநா் அறிவுரை
மக்கள் சேவைப் பணிகளை அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், பணியாளா்கள் மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் க.குணசேகரன் அறிவுறுத்தினாா்.
விழுப்புரத்திலுள்ள போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் கடலூா், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூா் ஆகிய 6 கோட்டங்களுக்குள்பட்ட மண்டல அலுவலா்கள், கிளை மேலாளா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் மேலும் பேசியது: போக்குவரத்துக் கழகத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு முனைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, புதிய பேருந்துகள் இயக்கம், பணியாளா்கள் பாதுகாப்பு நலன், அனைத்துக் கிளை அலுவலகக் கட்டடங்கள் புதுப்பிப்பு என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், நாம் ஒவ்வொருவரும் சிறந்த அக்கறையுடனும், பொறுப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும். பேருந்து இயக்கம், விபத்திலா பயணம் உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு வளா்ச்சியை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக அரசுப் பேருந்துகள் பாதுகாப்பான முறையில் இயக்கப்படுவது உறுதி செய்தல், வருவாய் பெருக்கம், டீசல் சிக்கனம், உதிரிப் பாகங்கள் கொள்முதல், ஆண்டு கணக்குகள் உள்ளிட்டவை குறித்து தொடா்புடைய அலுவலா்களுடன் ஆலோசனை நடத்திய மேலாண் இயக்குநா், போக்குவரத்துக் கழகத்தின் 50-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பணியாளா்கள், அலுவலா்களுக்கு கடிகாரம் உள்ளிட்ட நினைவுப் பரிசுகளை வழங்கினாா். மேலும், தலைமையகத்துக்கு வரும் பொதுமக்கள் அமரும் வகையில் பூங்காவையும் மேலாண் இயக்குநா் குணசேகரன் திறந்து வைத்தாா்.
கூட்டம் மற்றும் நிகழ்வில் போக்குவரத்துக் கழகத்தின் முதன்மை நிதி அலுவலா் சி.அனுஜா, பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), இரா.ஜெகதீஷ் (விழுப்புரம்), சி.பாண்டியன் (கடலூா்), ஸ்ரீதா் (திருவண்ணாமலை), ஏ.பெனட்ராஜன் (வேலூா்), ஏ.கிருஷ்ணமூா்த்தி (காஞ்சிபுரம்), கோபாலகிருஷ்ணன் (திருவள்ளூா்), முதுநிலைத துணை மேலாளா் துரைசாமி (மனித வளம்), அனைத்து மண்டல துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், தொழில்நுட்ப அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

