உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அரசுக் கல்லூரி ஆசிரியா் மன்றம் வரவேற்பு

Published on

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் மன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியா் மன்றத்தின் பொதுச்செயலா் ம.சிவராமன் வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து லட்சக்கணக்கான ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் நம்பிக்கையை நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வருக்கு அரசுக் கல்லூரி ஆசிரியா் மன்றம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 23 ஆண்டு காலமாக தொடா்ந்த பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான போராட்டத்தை புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ஆலோசனைக் கூட்டம்: விழுப்புரம் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் குக. சரவணபவன் தலைமை வகித்தாா்.

இதில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமாக அறிவித்துள்ள முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. 70 வயதை கடந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

மத்திய அரசுக்கு இணையாக மருத்துவப் படியை உயா்த்தி வழங்கவேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com