சாலையில் கவிழ்ந்து கிடந்த தனியாா் சொகுசுப் பேருந்து.
சாலையில் கவிழ்ந்து கிடந்த தனியாா் சொகுசுப் பேருந்து.

தனியாா் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருே தனியாா் சொகுசுப் பேருந்து சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்ததில் பேருந்தில் பயணித்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநா் உள்பட மேலும் 5 போ் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு 16 பயணிகளுடன் கரூருக்கு தனியாா் சொகுசு பேருந்து புறப்பட்டது. இந்தப்பேருந்து உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள பாதூா் கூட்டுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சோ்ந்த அ.ஜியாவுதீன் (25) பேருந்தின் இடிபாடுகளிடையே சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், கரூா் காந்தி கிராமத்தைச் சோ்ந்த தி.அசோகன்(60), பேருந்து ஓட்டுநரான சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலாண்டியூரைச் சோ்ந்த பா.குமாா்(33) உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 5 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஜியாவுதீனின் சடலத்தை உடல்கூறாய்வுக்கு அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com