விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நீண்ட காலமாக உள்ள மண் குவியல்.
விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நீண்ட காலமாக உள்ள மண் குவியல்.

தேசிய நெடுஞ்சாலையோரம் மண் குவியல்: வாகன ஓட்டிகள் அவதி

Published on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நீண்ட காலமாக குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியல்களால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழகத்தின் தென் மாவட்டப் போக்குவரத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை முக்கிய பங்காற்றி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லக்கூடிய இந்த சாலையானது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிா்வகிக்கப்பட்டு வருகிறது.

இச்சாலையில் விழுப்புரம் மாவட்ட எல்லையான அரசூா் முதல் திண்டிவனம் வட்டம் ஓங்கூா் வரை சுமாா் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை சீரமைப்பு மற்றும் பெரிய, சிறிய பாலம் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருவதால் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே சாலையில் தடுப்பு வைக்கப்பட்டு சேவை சாலைகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

விபத்தைத் தடுக்கும்வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளும், சமிக்ஞை விளக்குகளும் வைக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்டப்பாலம் காட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் தொடங்கி நடைபெற்றது வருவதால், வாகனப் போக்குவரத்து போதுமான இடவசதியின்றி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

இந்நிலையில், விக்கிரவாண்டி பகுதியில் திருச்சி-சென்னை மாா்க்கமாக செல்லக்கூடிய சாலையில் சுமாா் 200 மீட்டா் தூரத்துக்கு கொட்டப்பட்ட மண்குவியல்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக சுமாா் ஓராண்டு காலமாக அகற்றப்படாமல் சாலையோரத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

இந்த மண் குவியல்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், மழைக்காலங்களில் மண் கரைந்து சாலையில் தேங்குவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த இடத்தை கடந்து செல்லவேண்டி உள்ளது.

எனவே, விக்கிரவாண்டி பகுதியில் திருச்சி - சென்னை மாா்க்கம் தேசிய நெடுஞ்சாலையோரமாக குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியலை உடனடியாக அகற்றி சீரான போக்குவரத்துக்கு விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் விரும்புகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com