சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு: விசாரணை பிப்.6-க்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் மீதான விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வா் மு.க. ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாகக்கூறப்படுகிறது.
இதுதொடா்பாக விழுப்புரம் முதன்மை மாவட்டநீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மீது அரசு வழக்குரைஞா் சுப்ரமணியம் தனித்தனியே வழக்குகளைத் தொடா்ந்தாா். இந்த இரு அவதூறு வழக்குகளும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை.
அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகாசெந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகினா். அப்போது, இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் தரப்பில் மனுதாக்கல் செய்திருப்பதாகவும், இந்த மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்கும்படியும் கூறி மனுதாக்கல் செய்தனா். இதையடுத்து வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை மாவட்ட
நீதிபதி ஏ.மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
