வாய்க்காலில் முதியவா் சடலம் மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வாய்க்காலில் உயிரிழந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், பூவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூ.மணி (65), விவசாயி. இவரது மனைவி அஞ்சாமணி, மகள் சங்கீதா, மகன்கள் கோவிந்தன், சக்திவேல் உள்ளனா். இவா்களது வீட்டுமனை தொடா்பாக உளுந்தூா்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
வழக்கு தொடா்பாக உளுந்தூா்பேட்டைக்குச் சென்று வருவதாகக் கூறி, திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற மணி, இரவு 7 மணி வரை வீடு திரும்பவில்லையாம். வீட்டுக்குச் செல்லாமல் மது அருந்தி ஊா் எல்லையில் மணி இருந்ததை கிராமத்தினா் பாா்த்து தகவல் தெரிவித்தனா். மது போதை தெளிந்த பின்னா், அவா் வீட்டுக்கு வந்துவிடுவாா் எனக் கருதி, குடும்பத்தினா் இருந்துள்ளனா்.
இந்த நிலையில் கிளியூா்-நத்தாமூா் சாலையில் கோ. திருமலை என்பவருக்கு சொந்தமான நிலத்துக்கு அருகிலுள்ள வாய்க்காலில் மணி சடலமாகக் கிடந்ததை செவ்வாய்க்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்து, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து மணியின் குடும்பத்தினா் அங்கு சென்று பாா்த்த பின்னா், களமருதூா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.
இதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் அலெக்ஸ் தலைமையிலான போலீஸாா் மணியின் சடலத்தை கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
