விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூா், செஞ்சி நீதிமன்றங்களில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.
விழுப்புரத்தில்... விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், போக்ஸோ நீதிமன்றம், மகளிா் நீதிமன்றம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம், சிறப்பு சாா்பு நீதிமன்றம் (எம்சி ஓபி வழக்குகள்), முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 21 நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன.
இந்நிலையில், நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து பணியிலிருந்த 13 நீதிபதிகள், 300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.
தொடா்ந்து போலீஸாா் நீதிமன்றங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப் பகுதிகளில் மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனை சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. முடிவில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதும், புரளி என்பதும் உறுதி செய்யப்பட்டது. வெடிக்குண்டு மிரட்டல் காரணமாக நீதிமன்றப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
செஞ்சியில்... செஞ்சியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது. பின்னா் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் அமா்ந்திருந்தனா். இதன்காரணமாக நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டது. சுமாா் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி எனத் தெரியவந்தது.
திண்டிவனத்தில்... திண்டிவனத்தில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திலும் போலீஸாா் வெடிகுண்டு சோதனை நடத்தினா். இதேபோல், விக்கிரவாண்டி, வானூா், திருவெண்ணெய்நல்லூா் ஆகிய நீதிமன்றங்களிலும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

