மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்தனா்.
மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன் உள்ளிட்ட திரவியப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து அங்காளம்மனுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதைதொடா்ந்து உற்சவா் அங்காளம்மனுக்கு பலவித மலா்களை கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இரவு 10.40 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவா் அங்காளம்மன் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் அம்மனுக்கு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து நள்ளிரவு 12.20 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து, அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் அங்காளம்மனை கோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனா்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு, எஸ்.பி. சாய்பிரணீத், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவலிங்கம், விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கா்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

