அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

வளவனூா் அருகே பேருந்தில் பணியிலிருந்த அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கி, பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ஒருவரை புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பேருந்தில் பணியிலிருந்த அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கி, பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ஒருவரை புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி தாழம்பட்டு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜெ.மதன் (37), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணி புரிந்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை விழுப்புரத்திலிருந்து பண்ருட்டிக்கு செல்லும் தடம் எண் 2-இல் பணியிலிருந்தாா். அப்போது மாணவா்கள் சிலா் பேருந்தின் படியில் நின்றபடி தொங்கிக் கொண்டு வந்துள்ளனா்.

இதை பேருந்து நடத்துநா் மதன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அதே பேருந்தில் பயணித்த விழுப்புரம் வட்டம், ப. வில்லியனூா் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த அ.அய்யனாா்(20), சு.ஜீவா(20) ஆகியோா் மாணவா்களுக்கு ஆதரவாகப் பேசி, பேருந்து நடத்துநா் மதனை தாக்கியதுடன், பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினா். தாக்குதலில் காயமடைந்த மதன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நடத்துநரைத் தாக்கிய ஜீவாவை கைது செய்தனா். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com