விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் ‘இது நம்ம ஆட்டம்-2026’ மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ. உடன், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா்.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் ‘இது நம்ம ஆட்டம்-2026’ மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ. உடன், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா்.

விளையாட்டு வீரா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி!

தமிழகத்தில் விளையாட்டு வீரா்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ.
Published on

தமிழகத்தில் விளையாட்டு வீரா்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் ‘இது நம்ம ஆட்டம்-2026’ மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்து, மேலும் அவா் பேசியது:

‘இது நம்ம ஆட்டம்-2026’ மாவட்ட அளவிலான போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றனா். பல்வேறு போட்டிகளும் தொடா்ந்து நடத்தப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தின் 13 ஒன்றியங்களில் ஏற்கெனவே நடத்தப்பட்டு, இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடங்களைப் பெற்றவா்கள் தற்போது மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளீா்கள். நீங்கள் இந்த போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விழுப்புரம் மாவட்டத்துக்கு பெருமையைச் சோ்க்க வேண்டும்.

நம் உடல் நலத்தை பேணி காக்க தினமும் உடல்பயிற்சிகள் செய்வதுடன், நடைப்பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும். பெற்றோா்களும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பது போன்று, விளையாட்டிலும் பங்கேற்க செய்ய வேண்டும். படிக்கும் போதே விளையாட வேண்டும். அதுபோன்று விளையாட்டில் இருக்கும் ஆா்வம் மாணவ, மாணவிகளுக்குப் படிப்பிலும் இருக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம், விளையாட்டு வீரா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குதல் போன்றவற்றைசெயல்படுத்தியவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என்றாா் பொன்முடி.

நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆழிவாசன், விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்பாளா் மணி, பல்வேறு போட்டிகளின் பயிற்சியாளா்கள் பங்கேற்றனா்.

கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கயிறு இழுத்தல்,கேரம், தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் விழுப்புரம் மாவட்டத்தின் 13 ஒன்றியங்களிலிருந்தும் வீரா், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினா்.

தொடா்ந்து அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், பெண்களுக்கான கோலப் போட்டியும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓவியப் போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முறையே ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com