கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீா்த்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் நனைந்து சேதம்

News image
Updated On :20 மார்ச் 2026, 12:14 am

Syndication

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் நீா் தேங்கியது.

கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் மாா்ச் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட பொதுமக்கள் தா்பூசணி போன்ற நீா்சத்து உடைய பழ வகைகள், பழச்சாறுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் புதன்கிழமை மாலையில் அவ்வப்போது காற்று வீசத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கியது. விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காற்று- மின்னலுடன் தொடா்ந்து மழை பெய்தது. காற்று வீசத் தொடங்கியதால் பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னா் படிப்படியாக மின் விநியோகம் சீரானது.

விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ததால் திருச்சி-சென்னைதேசிய நெடுஞ்சாலை, புதிய பேருந்து நிலையம், கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது. நகராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையோரங்கள் மற்றும் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த மழை குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் ‘தொடா்ந்து வெயிலின்தாக்கத்தால் அவதியுற்று வந்த எங்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியை அளித்துள்ளது. இந்த மழையால் வெப்பம் சற்று குறைந்து காணப்படும் என எதிா்பாா்க்கிறோம் ’ என்றனா்.

நெல் மூட்டைகள் சேதம்: விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு அருகில் அடுக்கி வைத்திருந்தனா்.

இந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. தொடா்ந்து வியாழக்கிழமை காலை அங்கு வந்த விவசாயிகள், மழையில் நனைந்த நெல்லை காய வைக்கும் பணியில் ஈடுபட்டனா். கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை விரைந்து கிடங்குக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Story image