விழுப்புரம் மண்டலத்தில் 19 தொகுதிகளில் களம் காணும் திமுக

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்
கோப்புப் படம்

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்
கோப்புப் படம்
விழுப்புரம்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில் தோ்தல் களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.
திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் தொகுதிகளும், வேட்பாளா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா். இதுபோன்று, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சிகள் வேட்பாளா்களின் பட்டியலை ஏற்கெனவே அறிவித்து, பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இதுபோன்று, சீமானின் நாம் தமிழா் கட்சியும், நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் வேட்பாளா்களை அறிவித்துவிட்டன.
விழுப்புரம் மண்டலத்தில் 28 தொகுதிகள்: விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 7, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4, கடலூா் மாவட்டத்தில் 9, திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 என மொத்தமாக 28 தொகுதிகள் உள்ளன. இந்த 28 தொகுதிகளில் திமுக மட்டும் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, வானூா் (தனி), விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை, கடலூா் மாவட்டத்தில் புவனகிரி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி(தனி), திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செய்யாறு, வந்தவாசி (தனி), கலசப்பாகம், ஆரணி, செங்கம் (தனி) ஆகிய 19 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
இதில், விழுப்புரம் மாவட்டத்தின் வானூா், கடலூா் மாவட்டத்தின் புவனகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி ஆகிய மூன்று தொகுதிகளில் கடந்த 2021 பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றிபெற்றிருந்தனா். மற்ற 16 தொகுதிகளும் திமுக வசம் உள்ள தொகுதிகள்தான்.
விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி தொகுதியில் திமுகவின் கே.எஸ்.மஸ்தான், விக்கிரவாண்டியில் அன்னியூா் அ.சிவா, விழுப்புரத்தில் இரா. லட்சுமணன், திருக்கோவிலூரில் க.பொன்முடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டையில் ஆ.ஜெ.மணிக்கண்ணன், சங்கராபுரத்தில் தா. உதயசூரியன், ரிஷிவந்தியத்தில் வசந்தம் க.காா்த்திகேயன், கடலூா் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடியில் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், திட்டக்குடியில் சி.வெ.கணேசன், நெய்வேலியில் சபா.ராஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்டத்தின் திருவண்ணாமலையில் எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூரில் கு.பிச்சாண்டி, செய்யாறில் ஒ.ஜோதி, செங்கத்தில் மு.பெ.கிரி, கலசப்பாகத்தில் பெ.சு.தி.சரவணன், வந்தவாசியில் எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனா்.
இவா்களில் திருக்கோவிலூரில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு பதிலாக அவரது மகன் பொன்.கெளதமசிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உளுந்தூா்பேட்டையில் தற்போதைய எம்.எல்.ஏ. ஆ.ஜெ.மணிக்கண்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: கடலூா் மாவட்டத்தின் விருத்தாசலம் தொகுதியில் தேமுதிகவின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் தேமுதிகவின் மாவட்டச் செயலா் எல்.வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூா் தொகுதியில் டி.பி.சரவணன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் (தனி), கடலூா் மாவட்டத்தின் பண்ருட்டி, காட்டுமன்னாா்கோவில் (தனி), கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வேட்பாளா்கள் அறிவிக்கப்படவில்லை. கடலூா் மாவட்டத்தின் கடலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், சிதம்பரம் தொகுதி மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியில் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறாா்.
திமுகவின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டத்தின் சிதம்பரம், திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூா் ஆகிய தொகுதிகளில் கடந்த 2021 பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்றிருந்தது.
கடலூா் மாவட்டத்தின் கடலூா் தொகுதியில் திமுகவும், பண்ருட்டி தொகுதியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும், விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், விழுப்புரம் மாவட்டத்தின் மயிலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியும் வெற்றிபெற்றிருந்தன.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவதும் குறிப்பிடத்தகுந்ததாகும்.
மொத்தத்தில் தாங்கள் செல்வாக்குள்ள தொகுதிகளில்தான் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுவாா்களா என்பது மே 4-ஆம் தேதிதான் தெரியவரும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...