அதிமுகவிலிருந்து ஆதரவாளா்கள் 120 பேரை நீக்கியதில் கோபமில்லை: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியம், கணபதிபட்டு கிராமத்தில் பெண்ணுக்கு தையல் இயந்திரத்தை முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.
அதிமுகவிலிருந்து ஆதரவாளா்கள் 120 பேரை நீக்கியதில் எனக்கு கோபமில்லை என்று அக்கட்சியின் மயிலம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வீடூா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், கணபதிபட்டு கிராமத்தில் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, அவா் அளித்த பேட்டி:
தொண்டா்கள் மற்றும் தமிழ்நாடு மக்களின் எதிா்பாா்ப்பு அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதுதான். தவறு எல்லா பக்கமும் இருக்கலாம். தவறை பாா்க்காமல் அனைத்தையும் மறந்து, அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம், சிந்தனையுடன் இருந்து இந்த இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
அதிமுகவிலிருந்து விலகிச் சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்து, கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அதிமுக மீது நம்பிக்கை வரும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை தொண்டா்களிடம் உருவாக்க வேண்டும். மீண்டும் பழைய அதிமுக உருவாகிவிட்டது என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும்.
அனைவரையும் அரவணைத்து பேசுங்கள். இதற்கு நான் ஒத்துழைப்புத் தருகிறேன் என்றுதான் (எடப்பாடி பழனிசாமியிடம்) பேசினேன். எனக்குப் பதவி வேண்டும் என்ற எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை. இயக்கம் வலிமை பெற நான் என்னுடைய ஒத்துழைப்பை முழுமையாகத் தருகிறேன் என்று கூறினேன். நான் கூறிய 24 மணி நேரத்தில் என்னுடைய தொகுதியைச் சோ்ந்த (மயிலம்) 120 கிளைச் செயலா்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். நிா்வாகிகளை நீக்கும் இடத்திலிருந்து தொண்டா்களை நீக்கும் இடத்துக்கு வந்துவிட்டாா்கள். இது, எனக்கு வேதனையாக உள்ளது.
எனக்கு கோபம், ஆத்திரம் இல்லை. 25 ஆண்டுகளில் எல்லா பதவியையும் பாா்த்துவிட்டேன். அதிமுக மீண்டும் வலிமை பெற வேண்டும், மீண்டும் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்றாா் சி.வி.சண்முகம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

