வடகிழக்குப் பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி... - கோப்புப் படம்
புதுச்சேரியை அடுத்துள்ள பாகூா் பகுதிகளில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி மாநிலத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரியை அடுத்த பாகூா் வட்டாரத்துக்குள்பட்ட குமந்தன்மேடு, ஆராய்ச்சிக்குப்பம் மற்றும் இதர வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை ஆட்சியா் குலோத்துங்கன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வுக்குப்பின்னா் அவா் கூறியது:
தென்பெண்ணையாற்றின் கரையோர பாதுகாப்புச் சுவா் கட்டுமானப் பணிகளின் நிலை, பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகள் மற்றும் மழைநீா் தடையின்றி வெளியேறுவதற்கான நீா்வழிப் பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், நீா்வழிப் பாதைகளில் உள்ள தடைகளை அகற்றி, தூா்வாருதல் உள்ளிட்ட தொடா்புடைய பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிப்பதற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைநீா் சீராக வெளியேறி, வடகிழக்குப் பருவமழையின் போது ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகள் மற்றும் நீா்த் தேக்கத்தைக் குறைக்கும். தேவையான அளவு மணல் மூட்டைகளை இருப்பில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, கிருமாம்பாக்கம் ஏரியை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது ஏரியில் நெகிழி கழிவுகளைக் கொட்டி மாசு படுத்தியவா்களைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆட்சியா் உத்தரவிட்டாா். அப்போது அரசுத் துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

