காங்கிரஸை ஆதரிக்க வாய்ப்பே இல்லை!

பாஜகவையும், மோடியையும் ஜெயலலிதா விமர்சிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
காங்கிரஸை ஆதரிக்க வாய்ப்பே இல்லை!
Updated on
1 min read

பாஜகவையும், மோடியையும் ஜெயலலிதா விமர்சிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

குஜராத்தின் வளர்ச்சி குறித்த பாஜகவினரின் பிரசாரத்துக்கு ஜெயலலிதா பதிலளித்துள்ளார். ஆனால், பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள மதவாத கொள்கைகள், திட்டங்கள் குறித்து அவர் எதுவும் பேசவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையிலும் பாஜக குறித்து எதுவும் இல்லை. தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி சேரும் திட்டத்திலேயே அதிமுக இருப்பதாகவே தெரிகிறது.

மோடியும் அதிமுகவை விமர்சித்துள்ளாரே?

மோடியும், ஜெயலலிதாவும் மாநிலத்தின் வளர்ச்சி குறித்தே விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜகவின் மதவாதம் குறித்து பேசாத ஜெயலலிதாவுக்கு நன்றி செலுத்தும் வகையிலேயே அவரை தனிப்பட்ட முறையில் நண்பர் என்று மோடி புகழ்ந்துள்ளார்.

ஊழல் வழக்கில் திமுக எம்.பி.யான செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து அதிமுகவினரும், சொத்து குவிப்பு வழக்கு குறித்து திமுகவினரும் பிரசாரம் செய்கின்றனர். செல்வகணபதி செய்த ஊழல் அதிமுக ஆட்சியில் நடந்தது என்பதால் ஜெயலலிதாவும், செல்வகணபதி தற்போது திமுகவில் இருப்பதால் கருணாநிதியும், இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். இந்த விஷயத்தில் திருடனுக்கு தேள் கொட்டியது போலதான் திமுகவும், அதிமுகவும் தவிக்கின்றன.

தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமையாமல் தடுப்பதற்காக காங்கிரஸூக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் இடதுசாரி கட்சிகளுக்கு ஏற்படுமா?

நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை, மதவாதம் இரண்டையும் எதிர்த்து வரும் இடதுசாரிகள் காங்கிரஸை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். அதுபோன்ற ஒரு நிலை வராது.

தமிழகத்தில் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?

1971-க்குப் பிறகு தனித்துப் போட்டியிடுவதால் இடதுசாரி கட்சி தொண்டர்களிடம் உற்சாகமும், எழுச்சியும் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி ஆதரவாளர்களிடமும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. சில விஷயங்களில் எங்களுடன் மாறுபடும் பழ. நெடுமாறன் போன்றவர்களும் இடதுசாரிகளுக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளனர். மக்களிடமும் ஆதரவு பெருகியுள்ளது. எனவே, தேர்தல் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகள் திமுக அணிக்கு வருவார்கள் என கருணாநிதி பேசி வருகிறாரே?

அதற்கு வாய்ப்பே இல்லை. காங்கிரஸ், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் அப்படி பேசி வருகிறார். ஆனால், அது மக்களிடம் எடுபடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com