
ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.256 உயர்ந்து, ரூ.23,936-க்கு விற்பனையானது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி குறைந்தபட்ச விலையாக (ஒரு பவுன்) ரூ.20,984 ஆக இருந்தது. அதன்பிறகு, தற்போது சனிக்கிழமை அதிகபட்ச விலையை தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.32 உயர்ந்து, ரூ.2,992-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.41.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.41,900 ஆகவும் இருந்தது.
மேலும் விலை உயரும்: இதற்கிடையில், தங்கம் விலை மேலும் உயரும் என்று சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்தச்சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறியது:தங்கம் விலை உயர்ந்து வருவதற்கு சிரியா மீது போர் தொடுத்தல் முக்கிய காரணமாகும். சிரியா மீது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன.
இதை ரஷியா, சீனா ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. இந்த நிலைமை நீடிக்கும் பட்சத்தில், உலக பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக உலகச்சந்தையில் தங்கத்தின் விலை உயரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயரும்.
அட்சய திருதியையொட்டி முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக அதிக அளவில் வியாபாரிகள் தங்கத்தை கொள்முதல் செய்வர். இதனாலும் தங்கத்தின் விலை உயர்ந்து ரூ.24 ஆயிரத்தை கடக்கும் என்றார்.
சனிக்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 2,992
1 பவுன் தங்கம் 23,936
1 கிராம் வெள்ளி 41.90
1 பவுன் தங்கம் 41,900
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.