சங்கப் பாடல்களில் சில வியப்புகள்!

சங்க இலக்கியப் பாடல்கள் பழந்தமிழ் நாட்டு வீரத்தையும், கொடையையும், அறச்சிந்தனையையும், தூய காதலையும் புலப்படுத்துவதோடு, இப்படி இருக்குமா, இப்படி நடக்குமா என்று சிந்தையைக் கிளறும் வியப்புகளையும் கொண்டுள்
Published on
Updated on
2 min read

சங்க இலக்கியப் பாடல்கள் பழந்தமிழ் நாட்டு வீரத்தையும், கொடையையும், அறச்சிந்தனையையும், தூய காதலையும் புலப்படுத்துவதோடு, இப்படி இருக்குமா, இப்படி நடக்குமா என்று சிந்தையைக் கிளறும் வியப்புகளையும் கொண்டுள்ளன.

இதிகாசங்கள் வெறும் கற்பனையென்று கூறி அவற்றை நம்ப மறுப்போர் உள்ளத்தில் நம்பிக்கையை உண்டாக்கும் வண்ணம், பாரதப்போர் நடந்த காலத்திலேயே, ஒரு சேர மன்னன் வாழ்ந்து, போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு உணவு அளித்ததை ஒரு புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. கடவுள் வாழ்த்துக்கு அடுத்துள்ள அப்பாடல், சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் வாழ்த்திப் பாடியது. அப்பாடலில் புலவர்,

""அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ

நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருதுகளைத் தொழிய

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தேய்''

என்று வரும் வரிகளில், சேரலாதன், பாண்டவரும் கெüரவரும் போரிட்ட காலத்து, வீரர்களுக்கு பெருஞ்சோறு வரையாதளித்ததைக் குறிப்பிட்டுள்ளார். நெடுங்காலத்துக்கு முன் நிகழ்ந்த பாரதப் பெரும்போரில், ஒரு தமிழ் மன்னன், போர் வீரர்களுக்கு உணவை வரையாதளித்தான் என்பது வியப்புக்குரியதாகும்.

சோழ மன்னன் ஒருவனைப் பற்றி வியப்பான தகவல் ஒன்றை மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடும்போது,

""ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்

  தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்''

(புறம்-39)

என்று பாடி, கிள்ளிவளவனின் முன்னோருள் ஒருவனைக் குறிப்பிடுகிறார் புலவர். அந்தச் சோழமன்னன், தேவர்களின் பகைவராகிய அசுரர்களின், வானத்தில் அசைகின்ற மதில்களை அழித்தவன் என்பது புலவர் கூறும் வியப்பான செய்தியாகும். ஆகாயத்தில் அசைந்து சென்ற மதில்களை அழித்த காரணத்தால், இம்மன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட்செம்பியன் என்று போற்றப்பட்டான். இம்மன்னன் காவிரிப் பூம்பட்டினத்தில் இந்திர விழாவை முதன் முதலில் நடத்தியதைக் கூறவந்த மணிமேகலை ஆசிரியர்,

""ஓங்குயிர் மலயத்து அருந்தவன் உரைப்பத்

  தூங்கெயில் எறிந்த கொடித்தோட் செம்பியன்

  விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று''

(விழாவறைகாதை-3-4)

என்று பாடுவதில் சோழமன்னன் அருஞ்செயலையும் அதனால் பெற்ற பெயரையும் காணலாம். இளங்கோவடிகளும், சிலப்பதிகாரத்தில்,

""வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

  ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை?

  ஓங்கரணம் காத்த உரவோன், உயர் விசும்பில்

  தூங்கெயில் மூன்றெரிந்த சோழன்காண் அம்மானை''

  என்று பாடுகிறார்.



சாமி.சிதம்பரனார் இப்பகுதியை, ""மூன்று மதில்கள் பொருந்திய ஒரு நகரம்; அது வானத்தில் அசைந்து செல்லும் தன்மையுள்ளது; அந்நகரில் அசுரர்கள் வாழ்ந்து வந்தனர்; சோழமன்னன் தேவர்கள் வியக்கும்படி அந்நகரை அழித்து, அசுரர்களை வென்றான். இவன் பெயர் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்'' என்று விளக்குகிறார்.

இப்போதுள்ள மதுரை மாநகரில் மூன்றாவது தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டதென்றும், இத் தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் நிகழ்ந்த கடல்கோள் காரணமாக, தென் தமிழகத்தை ஒட்டியிருந்த நிலப்பகுதியும், அதில் இருந்த பஃறுளியாறும் மலையும் அழிந்தன என்றும் இறையனார் களவியல் உரை கூறுகிறது. இக்கடல்கோளை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்,

""பஃறுளி யாறும் பன்மலை யடுக்கத்துக்

  குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள''

(காடுகாண்காதை 19-20)

என்று குறிப்பிடுகிறார்.

இக்கடல்கோள் நிகழ்வதன்முன் வாழ்ந்த நெட்டிமையார் என்ற புலவர் பாடிய பாடல்கள் புறநாநூற்றில் (9,12,15) உள்ளன என்பது வியப்புக்குரியதாகும். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய பாடல்கள் அவை. அவற்றுள் ஒன்றில் "பஃறுளியாற்று மணலினும் பல ஆண்டுகள் நீ புகழுடன் வாழ்க!' என்ற பொருளில்,

""எங்கோ வாழிய குடுமி!

  .......... .............. .......

  நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே''

  (புறம்-9)

என்று வாழ்த்துவதில், கடல்கோளால் அழியாத பஃறுளியாற்றைக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. பாடலின் பழமையையும், பாடல் தோன்றிய காலத்தையும் உணர்ந்து வியப்படைகிறோம்.

பறவைகளிடம் பேரன்பு காட்டி பாதுகாவலனாக இருந்த ஆய்எயினன் என்னும் வேளிர்குலத் தலைவன் போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து இறந்து கிடந்தபோது, அவன் உடலை ஞாயிற்றின் கதிர்கள் காய்ந்து வருத்தாமல் பறவைகள் ஒன்றாகக் கூடி, தம் சிறகுகளால் பந்தலிட்டு நிழல் உருவாக்கிக் காத்தன என்ற வியப்பூட்டும் செய்தியை அகநானூற்றில் பார்க்கிறோம்.

""வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்

  அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை

  இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு

  நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து

  ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ஒருங்கு

  அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று

  ஒன்கதிர் தெறாமை சிறகரில் கோலி

  நிழல் செய்து''              (அகம்-208)

என்று பரணர் பாடுகிறார். இச்செய்தியை இன்னொரு செய்யுளிலும் (அகம்-181) பதிவு செய்துள்ளார் பரணர்.

இப்படிச் சங்கப் பாடல்களில் சில நம் சிந்தனையைக் கிளறுகின்றன; வியப்பூட்டுகின்றன. விருப்பு, வெறுப்பு இல்லாமல் உண்மை காணவேண்டும் என்ற நோக்கத்தோடு இதுகுறித்து மேலாய்வு செய்தால் நலம் பயக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com