சென்ற வார தொடர்ச்சி...
பண்டித நடேச சாஸ்திரி
(1859 - 1906)
நடேச சாஸ்திரி தமிழ் முன்னோடி நாவலாசிரியர்களுள் ஒருவர். 1859 -ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் மணக்காலில் சங்கேந்தி மகாலிங்க சாஸ்திரி, அகிலாண்டேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். எஸ்.எம். நடேச சாஸ்திரி என்றழைக்கப்பட்டவர் பின்னர் பண்டித நடேச சாஸ்திரியானார்.
இளம் வயதிலேயே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் வல்லுநராக இருந்தார். கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு அதீத ஈடுபாடு இருந்தது. கும்பகோணம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவருக்கு தொல்லியல் துறையில் பணி கிடைத்தது. இதனால் 1884- 1893-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பல ஊர்களைச் சுற்றிப் பார்த்து ஆய்வு மேற்கொள்ள வேண்டி வந்தது. அப்பயணத்தை அவர் பயனுள்ளதாக்கிக் கொண்டார்.
தென்னாட்டில் பல பகுதிகளில் சொல்லப்பட்டு, கேட்டறிந்த கதைகளைத் தொகுத்து "தென்னாட்டு நாடோடிக் கதைகள்' என தமிழிலும், "FOLKLORE OF SOUTHERN INDIA' என ஆங்கிலத்திலுமாக 4 தொகுதிகளை வெளியிட்டார்.
சிறுவயதிலேயே தாயை இழந்துவிட்ட நடேச சாஸ்திரியை பாட்டியும், சின்னம்மாவும்தான் வளர்த்தார்கள் என்றும் அவர்கள் வழியாக சொல்லக் கேட்ட கிராமியக் கதைகள்தான் அவரை பிற்காலத்தில் அத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட வைத்தது என்றும் தென்னாட்டு நாடோடிக் கதைகள் மூன்றாவது தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நாடோடிக் கதைகளின் ஆங்கிலப் பதிப்பிற்கு பெரிய அளவில் வரவேற்பும், அங்கீகாரமும் கிடைத்தது. இங்கிலாந்து ராயல் சொசைட்டி அவரை உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
1900-ஆம் ஆண்டில் நடேச சாஸ்திரி சொந்தமாக நாவல் ஒன்றை எழுதினார். "தீனதயாளு' என்ற அந்த நாவல்தான் அவருடைய முதல் நாவல். அப்போது அவரது வயது 41. "தீனதயாளு' நாவல் இன்றும் படிக்க முடிகிறது என்பதுதான் சிறப்பான அம்சம். அவருடைய மற்றொரு பிரபலமான நாவல் "கோமளம் குமரியானாள்'. சில துப்பறியும் நாவல்களையும் அவர் எழுதியுள்ளார்.
10.04.1906 அன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு சிறிய சந்து போன்ற தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தபோது கோயிலுக்குச் சொந்தமான குதிரையொன்று வெடி சப்தம் கேட்டு மிரண்டு வேகமாக எதிரில் ஓடி வந்தது. ஒதுங்கிய அவரை குதிரை முட்டித் தள்ளியதில் நிலை குலைந்து கீழே விழுந்தார். படுகாயமுற்ற நடேச சாஸ்திரி சிகிச்சைப் பலனின்றி இருதினங்கள் கழித்து (12.4.1906) தனது 46- ஆவது வயதில் காலமானார்.
அ.மாதவையா (1872- 1925)
அனந்த நாராயண ஐயர் மாதவையா என்கிற அ.மாதவையா திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் கிராமத்தில் 1872- ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை அனந்த நாராயண ஐயர். தாய் முத்து மீனாட்சி.
அ.மாதவையாவின் குடும்பம் பெரியகுளத்திலிருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்ததும் அ.மாதவையா சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் படித்து முதுகலை பட்டம் பெற்றார்.
சுங்கவரித் துறையில் உயர் அதிகாரியாக பதவியேற்று உப்பு உற்பத்தி , விநியோகம், விற்பனை ஆகியவற்றை குதிரையில் ஏறி ஊர் ஊராகச் சென்று உப்பின் மீதான சுங்க வரி வசூலை கவனித்து வந்தார். (பின்னர் அந்த வேலை பிடிக்காது விருப்ப ஓய்வு பெற்றார்)
அ.மாதவையா இளம் பருவத்திலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசவும், படிக்கவும், எழுதவும் ஆற்றல் பெற்றிருந்தார். அவர் "விவேக சிந்தாமணி' பத்திரிகையில் "சாவித்திரி சரித்திரம்' என்ற நாவலைத் தொடராக எழுதினார். அதுவே தமிழ்ப் பத்திரிகையில் வெளிவந்த முதல் தொடர்கதை. ஆனால் அது தொடர்ந்து வெளிவரவில்லை. அடுத்து அ.மாதவையா 1898 -ஆம் ஆண்டு "பத்மாவதி சரித்திரம்' என்ற நாவலின் முதல் பாகத்தை எழுதி வெளியிட்டார். அதுவே தமிழில் வெளிவந்த மூன்றாவது நாவல் - அ.மாதவையாவின் முதல் நாவல். அப்போது அவரது வயது 26. பின் இரண்டு பகுதிகள் எழுதப்பட்டு சுமார் 300 பக்கங்களில் "பத்மாவதி சரித்திரம்' ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டது.
அ.மாதவையாவின் ஆங்கிலச் சிறுகதைகளை சென்னையிலிருந்து வந்த "THE HINDU' ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டது. சில சிறுகதைகளை கிறிஸ்துவ கல்லூரியின் ஆங்கில இதழ் பிரசுரித்தது. அவர் எழுதிய "தில்லை கோவிந்தன்' என்ற முதலாவது ஆங்கில நாவல் லண்டனில் வெளிவந்தது. இரண்டாவது ஆங்கில நாவல் "கிளாரிந்தா'. அதை சரோஜினி பாக்கியமுத்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
அ.மாதவையா சமூக முன்னேற்றத்தை வலிறுத்தியதுடன் மூட நம்பிக்கையை எதிர்த்தும் எழுதினார். சிறுகதை, நாவல், நாடகம், இசைப்பாடல்கள் என பல துறைகளிலும் ஆர்வத்துடன் எழுதினார். "பஞ்சாமிருதம்' என்ற பத்திரிகையைத் தொடங்கி கதை, கட்டுரை, கவிதைகளை வெளியிட்டார். அதில் அவர் எழுதிய "கண்ணன் பெரும் தூது' என்ற சிறுகதையை எழுத்தாளர் புதுமைப்பித்தன் தமிழின் மகத்தான சிறுகதை எனப் பாராட்டி எழுதினார்.
"விஜய மார்த்தாண்டம்', "முத்து மீனாட்சி', "திருமலை சேதுபதி' ஆகியவை அ.மாதவையாவின் மற்ற நாவல்கள். ஆங்கிலத்தில் கவிதைத் தொகுப்பொன்றும் வெளிவந்துள்ளது.
உயர்தர கிரந்தங்களும், நாவல் எனும் கிரந்தமும் மனதைக் கவர்ந்து மகிழ்வூட்டுதலை இரண்டாவது கருத்தாகவும் கொண்டவை என்கிற கருத்தைக் கொண்டவர்.
1916- ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்த அறக்கட்டளை ஒன்று தமிழ் நாட்டுச் சிறப்பு, மொழி வளம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கவிதைப் போட்டியை நடத்தியது. புதுச்சேரியிலிருந்த பாரதியார், சென்னையிலிருந்த அ.மாதவையா உட்பட பலரும் போட்டியில் கலந்து கொண்டனர். அ.மாதவையா எழுதிய "இந்தியக்கும்மி' என்ற கவிதை முதல் பரிசாக ரூ.300-ஐப் பெற்றது. பாரதியாரின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே' கவிதை மூன்றாவது பரிசாக ரூ.100-ஐப் பெற்றது.
அ.மாதவையாவின் முதல் மகன் மா. அனந்த நாராயணன் ஐ.சி.எஸ். அதிகாரி . பல உயர் பதவிகளுக்குப் பிறகு நீதிபதியானார். தந்தையைப் போலவே அவரும் ஆங்கில நாவலாசிரியர்.
இரண்டாவது மகன் மா. கிருஷ்ணன் சிறந்த வானுயிர் புகைப்படக் கலைஞர். சுற்றுப்புறச் சூழல், வனம், வனவிலங்குகள் பற்றியும் எழுதிப் புகழ்பெற்ற எழுத்தாளர்.
1925- ஆம் ஆண்டில் அ.மாதவையா சென்னை பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினரானார். அதே ஆண்டு நடைபெற்ற ஒரு சென்ட் கூட்டத்தில் பி.ஏ. இளங்கலை பட்டப் படிப்பில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டுமென்று சொல்லியவாறே அ.மாதவையா மயக்கமுற்று நிலைகுலைந்து சரிந்தார். அப்போதே அவர் உயிரும் பிரிந்தது.
மறைமலை அடிகள் (1876- 1950)
தனித்தமிழ் இயக்கம் தந்த சொக்கநாதபிள்ளை வேதாசலம் தனது பெயரை மறைமலை அடிகள் என வைத்துக் கொண்டார்.
1876-ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காடம்பாடியில் பிறந்தார். தந்தை பெயர் சொக்கநாத பிள்ளை. இளமைக் காலத்தில் நாகை வேதாசலம் பிள்ளை என்றழைக்கப்பட்டார்.
சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவருக்கு ஆழ்ந்த ஞானமிருந்ததால் அவற்றில் படிக்க, பேச, எழுதக் கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தார்.
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அவருடன் கூட பணியாற்றியவர் சூரிய நாராயண சாஸ்திரி. தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு அவரும் தனது பெயரை "பரிதிமாற்கலைஞன்' என வைத்துக் கொண்டார்.
மறைமலை அடிகள் உளவியல், சரித்திரம், சமூக இயல், சைவ சித்தாந்தம், மரணத்திற்குப்பின் வாழ்க்கை, மொழித் தூய்மை என பலவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். இந்தி எதிர்ப்பாளர். தமிழில் கணக்கற்ற பிறமொழிச் சொற்கள் கலந்ததைப் பொறுக்க முடியாது தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார்.
இருபதாம் நூற்றாண்டில் உரைநடைத் தமிழில் எழுதப்படும் கதை, நாவல் ஆகியவற்றின் பங்கு மகத்தானதாக இருக்குமென்பதைத் தெரிந்து அவர் ஆங்கிலத்தில் படித்த நாவல்களை அடியொற்றி தமிழில் நாவல் எழுத முனைந்தார். ஆங்கிலத்தில் ரெனால்டு என்பவர் எழுதிய நாவல்களைப் படித்த உத்வேகத்தினால் அதையே முன்மாதிரியாகக் கொண்டு "குமுதவல்லி' என்ற நாவலை 1911- ஆம் ஆண்டு எழுதினார். அதுவே மறைமலை அடிகள் எழுதிய முதல் நாவல். அப்போது அவரது வயது 35. இரண்டாவது நாவல் "கோகிலாம்பாள் கடிதங்கள்' (அ) "நாக நாட்டரசி' என மொத்தம் 52 நாவல்களை எழுதியுள்ளார்.
மறைமலை அடிகள் புத்தகப் பிரியர் என்பதால் வருவாயில் பெரும்பகுதியைப் புத்தகம் வாங்குவதில் செலவழித்தார். அவரிடம் சேர்ந்த சுமார் 4000 புத்தகங்களைக் கொண்டு மறைமலை அடிகள் நூலகம் அமைத்தார்.
வடமொழியிலிருந்து "சாகுந்தலம்' நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அவர் தனது நாட்குறிப்பை ஆங்கிலத்தில் எழுதினார். இந்திய அரசு மறைமலை அடிகளுக்கு சிறப்புத் தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 1950-ஆம் ஆண்டு அவரது 74-ஆவது வயதில் காலமானார்.
கரிச்சான் குஞ்சு ( 1919-1992)
ராமாமிருத சாஸ்திரி நாராயணஸ்வாமி என்ற "கரிச்சான் குஞ்சு' தஞ்சை மாவட்டம் நன்னிலம் என்ற ஊரில் 1919-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ராமாமிருத சாஸ்திரி, தாய் ஈஸ்வரி அம்மாள். பாரதியாரின் மீது ஈடுபாடு கொண்டதால் கரிச்சான் குஞ்சு என்ற பெயரை வைத்துக் கொண்டார். அதுவே அவருக்கு இலக்கிய அடையாளம் காட்டும் பெயராக அமைந்துவிட்டது.
கரிச்சான் குஞ்சு தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய பன்மொழி அறிவு கொண்டவர். இளம் வயதிலேயே (8-15 ) பெங்களூரில் இருந்த தாய்மாமனிடம் சமஸ்கிருத மொழியையும் , சுக்ல யஜுர் வேதமும் கற்றார். 1936 -40 - ஆம் ஆண்டுகளில் மதுரை ராமேஸ்வரம் தேவஸ்தான பள்ளியில் படித்தார்.
கும்பகோணத்தில் வாழ்ந்தால் கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன் ஆகியோரின் நட்பு கிடைத்தது. அவர்களுடன் உரையாடியதில் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு எழுத ஆரம்பித்தார்.
1940 -ஆம் ஆண்டு "மலர்ச்சி' என்ற சிறுகதையை "கலைமகள்' இதழில் "ஏகாங்கி' என்ற பெயரில் எழுதினார். அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின் 1978-ஆம் ஆண்டு "பசித்த மானிடம்' என்ற நாவலை எழுதினார். அதுவே அவரது முதல் நாவலும் ஒரே நாவலும் ஆகும். அப்போது அவரது வயது 59.
முதல் நாவலே அவருக்கு இலக்கிய அங்கீகாரத்தைத் தந்தது. நாவலாசிரியர் என்கிற அங்கீகாரம் பெற நிறைய நாவல்களை எழுத வேண்டும்மென்கிற அவசியம் கிடையாது என்கிற கருத்தை உடையவர்.
கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றிய கரிச்சான் குஞ்சு 1977-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். எழுதுவதை விட இலக்கியம் பற்றி பேசுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 1992- ஆம் ஆண்டு தனது 73-ஆவது வயதில் காலமானார்.
- அடுத்த இதழில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்

திருப்பரங்குன்றத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு திமுக, பாஜகதான் காரணம்: சிடிஆர். நிர்மல் குமார்
மமதாவின் ஹெலிகாப்டர் அருகில் பறந்த மர்ம ட்ரோனால் பரபரப்பு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


