உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம் மூன்றாம் பாதம் என்று வருகிறது. லக்னம் மற்றும் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்திற்கும் அதிபதியாகி லக்ன கேந்திரத்தில் தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெறுவது சிறப்பு. மேலும் லக்னாதிபதியான சனிபகவான் பஞ்சமஹா புருஷ யோகங்களிலொன்றான சச மஹா யோகத்தைக் கொடுக்கிறார். பன்னிரண்டாம் வீடான விரயாதிபதி லக்னத்தில் இருப்பது பொதுவாகக் கூறினால் குறை என்றாலும் அவருக்கு லக்ன ஆதிபத்தியம் உண்டாவதால் லக்ன ஆதிபத்தியத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூற வேண்டும். பூர்வபுண்ணிய புத்திர புத்தி மற்றும் அஷ்டமாதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். நான்காமதிபதியான சுக ஸ்தானாதிபதியும் ஒன்பதாமதிபதியும் பாக்கியாதிபதியுமான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
பொதுவாகவே இரண்டு திரிகோணாதிபதிகள் இணைந்திருப்பது சிறப்பு. அதுவும் அவர்கள் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே இணைந்திருப்பது மிகவும் சிறப்பாகும். புதபகவானுக்கு அதிதேவதையாக மஹாவிஷ்ணுவும் சுக்கிரபகவானுக்கு அதிதேவதையாக மகாலட்சுமியும் ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கிறது. புத சுக்கிர பகவான்களின் இணைவை மஹாவிஷ்ணு மஹாலட்சுமி யோகம் என்று கூற வேண்டும். பொதுவாகவே புத சுக்கிர பகவான்களின் இணைவு அனைத்து லக்னங்களுக்கும் நன்மை செய்யும் அமைப்பு என்றாலும் அவர்கள் யோகக்காரர்களாக அமையும் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்ப லக்னகாரர்களுக்கு மேலும் சிறப்புகள் கூடும் அமைப்பு இது என்றால் மிகையாகாது. அதனால் அவருக்கு இந்த திவ்ய தம்பதிகளின் இணைவு சிறப்பான அதிர்ஷ்ட வாய்ப்புகளை புத சுக்கிர பகவான்களுக்குரிய காரகத்துவங்களின் மூலம் கிடைக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். தைரிய தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானத்தில் விபரீத ராஜயோகம் பெற்று (மூன்றாமதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதால் சூரியபகவானின் சாரத்தில் (உத்திர நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார், ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சுயசாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சூரியபகவான் ஆறாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். கேதுபகவான் ரிஷப ராசியில் சந்திரபகவானின் சாரத்திலும் (ரோகிணி நட்சத்திரம்) ராகு பகவான் விருச்சிக ராசியில் புதபகவானின் சாரத்திலும் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் முறையே மிதுன தனுசு ராசிகளை அடைகிறார்கள்.
3,6,8,12 ஆம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் அல்லது துர்ஸ்தானங்கள் என்று கூறுவார்கள். இந்த வீடுகள் ஜாதகத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவர்களின் பலத்தைக்கொண்டே ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்ட யோகங்கள் உண்டாகுமா என்று பார்க்க வேண்டும். மூன்றாம் வீட்டை தைரிய ஸ்தானம் என்றும்; ஆறாம் வீட்டை உப ஜயஸ்தானம் என்றும் (வெற்றிக்கு உதவும் வீடு) , எட்டாம் வீட்டைப் புதையல் ஸ்தானம் என்றும்; பன்னிரண்டாம் வீட்டை அயனம் (தூக்கம்) ஸ்தானம் என்றும் வைத்துள்ளார்கள். இப்படிப் பார்த்தால் இந்த மறைவு ஸ்தானங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பல சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது கடலின் ஆழத்தில்தான் நல்முத்து இருக்கிறது என்பதுபோல் இவைகள் அமைகின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் புதைக்கப்பட்டிருக்கும் இடங்கள் இந்த மறைவு ஸ்தானங்கள் என்றால் மிகையாகாது. மேலும் சுபக் கிரகங்கள் கேந்திர ராசிகளுக்கு அதிபதிகளாக வந்தால் கேந்திராதிபத்ய தோஷத்திற்கு ஆட்படுவார்களல்லவா? அவர்கள் மறைவு ஸ்தானங்களுக்கு வந்தால் அவர்களின் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும். "மறைந்த புதன் நிறைந்த மதி,' "மறைந்த குரு நிறைந்த நிதி' என்பதும் ஜோதிட வழக்கு என்பதையும் நாம் மறக்கக்கூடாது. இரண்டு வீடுகளுக்கு ஆதிபத்யம் உள்ள கிரகங்களுக்கு ஒரு வீடு மறைவு ஸ்தானமாக வந்தால் அந்த கிரகத்திற்கு வலு கூடி விடுகிறது.
உதாரணமாக, உங்கள் மகளுக்கு பன்னிரண்டாமதிபதியும் எட்டாமதிபதியும் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. இதனால் மறைவு ஸ்தானங்களின் அசுப ஆதிபத்யங்கள் குறைந்து நன்மை தரும் ஆதிபத்யம் சிறப்பாக வேலை செய்யும். ஆறாமதிபதி பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தைப் பெறுகிறார். அதோடு குருபகவானின் பார்வையும் ஆறாமதிபதியின் மீது படிவதால் சிறப்பான குருசந்திர யோகம் உண்டாகி படித்த படிப்புக்கு அப்பாற்பட்ட துறையிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவார். அதோடு பன்னிரண்டாம் வீடு சர ராசியாகி அங்கு வலுவான நீர் கிரகம் அமர்ந்திருப்பதால் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும்.
அதேநேரம் ஏழாமதிபதி ஆறாம் வீட்டில் மறைவு (தன் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடு) குறை. அவர் லக்னாதிபதியின் சாரத்தில் இருப்பது ஓரளவுக்கு குறையை குறைக்கும் அம்சம் என்றாலும் சனி பகவானுக்கு களத்திர ஸ்தானாதிபதி விரோதி என்கிற காரணத்தால் இதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம்.
மற்றபடி புத சுக்கிர பலத்தால் மணவாழ்க்கை சீராகவே செல்லும் என்பதில் ஐயமில்லை. செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டில் (புத பகவானின் வீட்டில்) இருந்தால் செவ்வாய் தோஷமில்லை. அதோடு அவருடன் குருபகவான் இணைந்திருப்பது குருமங்கள யோகமாகும். அஷ்டவர்க்கத்தில் அவருக்கு மூன்றாம் வீட்டிற்கு 37 பரலும் ஆறாம் வீட்டிற்கு 32 பரலும் எட்டாம் வீட்டிற்கு 23 பரலும் பன்னிரண்டாம் வீட்டிற்கு 18 பரலும் கிடைத்து மொத்தத்தில் 110 பரல்கள் கிடைக்கின்றன. இந்த நான்கு இடங்களுக்கும் சேர்த்து 112 பரல்களைத் தாண்டக்கூடாது என்பது விதி. அதனால் மறைவு ஸ்தானங்கள் அதிர்ஷ்ட வாய்ப்புகளைக் கொடுக்க பலம் பெற்றுள்ளார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் இந்த ஆண்டே சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.