எனக்கு 72 வயதாகிறது. என் ஜாதகம் அருள் ஜாதகமா? பொருள் ஜாதகமா? இருள் ஜாதகமா? எனக்கு புதன் தசை, சுக்கிர புக்தியில் மரணம் உண்டாகும் என்று கூறினார். ஆனால் இந்த சுக்கிரபுக்தியில் என் மனைவி சிவலோக ப்ராப்தி அடைந்துவிட்டார். இதனால் எனக்கு அதிர்ஷ்டம் போய்விட்டதா? எனக்கு கஷ்ட காலம் தானா? கண்டம் எதுவும் ஏற்படுமா? ஏஜென்ஸி எடுத்து நடத்தலாமா? சொத்துகள் சேருமா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகர்
உங்களுக்கு தனுசு லக்னம், அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி. அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் கர்ம தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுய சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் உச்ச ராசியான ரிஷப ராசியை அடைகிறார். அஷ்டம ஸ்தானம் என்பது எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்தைக் குறிக்கிறது. பொதுவாக, ஒரு கிரகத்திற்கு எட்டாம் வீட்டின் ஆதிபத்யம் வந்தால் அஷ்டமாதிபத்ய தோஷம் உண்டாகும். அதேபோல் அஷ்டம ஸ்தானத்தில் அமரும் கிரகங்களும் எட்டாம் வீட்டின் காரகத்துவத்திற்கு ஆட்படுகிறது. இது பொதுவான விதியாகும். இதில் முதல் விதிவிலக்கு என்பது சூரிய, சந்திர பகவான்களுக்கு அஷ்டமாதிபத்ய தோஷம் உண்டாகாது என்பதாகும். அதேபோல் சனிபகவானும் அஷ்டம ஸ்தானத்தில் இருந்தாலும், அஷ்டம ஸ்தானத்திற்கு ஆதிபத்யம் பெற்றாலும் ஆயுள் சம்பந்தப்பட்ட குறைகள் நீங்கிவிடும்.
உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு ஆதிபத்யம் பெற்றுள்ள சந்திரபகவான் தொழில் ஸ்தானத்தில் இருப்பதாலும் தீர்க்காயுள் உண்டு என்று கூறவேண்டும். அதனால் தனுசு, மகர லக்னங்களுக்கு சந்திர, சூரிய பகவான்கள் நன்மையே செய்வார்கள். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மேஷராசியை அடைகிறார். இதனால் பூர்வபுண்ணியாதிபதி ராசியிலும் நவாம்சத்திலும் பலமாக இருக்கிறார் என்று கூறவேண்டும்.
பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார். பாக்கியாதிபதி ராசியில் மறைந்தாலும் நவாம்சத்தில் பலம் பெறுவது சிறப்பாகும். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். அந்தந்த காரகர்கள் அந்தந்த பாவத்தில் அமர்ந்திருந்தால் அந்த காரகம் பாதிக்கப்படும் என்பது விதி. இதை "காரகோ பாவ நாஸ்தி' என்பார்கள். இதில் ஆயுள் காரகரான சனிபகவான் ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் இதற்கு விதிவிலக்காகி தீர்க்காயுள் உண்டாகும் என்று கூறவேண்டும். ருண, ரோக, சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் ஏழாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சன்னி ராசியை அடைகிறார். கேதுபகவான் அயன, சயன, மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
லக்னம், பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களை திரிகோண ஸ்தானங்கள் அல்லது மகாலட்சுமி ஸ்தானங்கள் என்று அழைக்கிறோம். ஒரு மனிதனுக்கு இந்த மூன்று ஸ்தானங்களும் ஸ்தானாதிபதிகளும் வலுத்திருந்தால் வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அனைத்து யோக பாக்கியங்களும் தானாகவே தேடிவந்து கிடைத்துவிடும். இதில் இரண்டு திரிகோணாதிபதிகள் வலுத்திருந்தாலே போதுமானது. இந்த மூன்று திரிகோணாதிபதிகள் இணைந்திருப்பவர்களை யோகசாலிகள் என்று கூறலாம். அதோடு இந்த சேர்க்கை லக்னம் அல்லது ஐந்தாம் வீடு ஒன்பதாம் வீட்டில் ஏற்பட்டால் அவர்களை பேரதிஷ்டசாலிகள் என்று கூறவேண்டும். மற்றபடி இந்த சேர்க்கை மற்ற இடங்களில் ஏற்பட்டால் பலன்கள் சற்று ஏறக்குறைய அமையுமே அன்றி சராசரிக்கும் சற்று கூடுதலான நற்பலன்கள் உண்டாகும் யோகத்தை சஞ்சித கர்மாவினால் உண்டாகிறது என்றும் கூறலாம். அதாவது (நீங்கள் கேட்காமலேயே உங்களுக்குக் கிடைக்க இருப்பது) வரும் நன்மைகளை எவராலும் தடுக்க முடியாது. இதை அருள் ஜாதகம் என்று கூறவேண்டும்.
1,4,7,10 ஆகிய நான்கு வீடுகளை கேந்திர ஸ்தானங்கள் அல்லது மகாவிஷ்ணு ஸ்தானங்கள் என்று அழைக்கிறோம். இந்த வீடுகள் வலுத்திருந்தால் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி வெற்றியடைவார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்தி இலக்குகளை எட்டும் ஆற்றல் உண்டாகும். கேந்திர ஸ்தானங்களைத் தூண்கள் என்பார்கள். இதை பொருள் ஜாதகம் என்று கூறுவார்கள்.
3, 6, 8, 12 ஆம் வீடுகள் மறைவு ஸ்தானங்கள் என்று கூறப்படுகிறது. இந்த ராசிகளில் லக்னாதிபதி உட்பட அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அவைகளை இருள் ஜாதகம் என்று கூறுவார்கள். இந்த அருள், பொருள், இருள் ஆகியவைகளுக்கு திரிகோணம், கேந்திரம் மற்றும் மறைவு ஸ்தானங்கள் காரணமாக அமைந்தாலும் மனிதப் பிறப்பில் இப்படி முழுமையான நிலை ஏற்படுவதில்லை. அனைவரின் ஜாதகத்திலும் இந்த மூன்றும் கலந்தே இருக்கும். வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் கஷ்டப்படுபவர்கள் தங்கள் நிலைமாறி சிறப்படைவதையும் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கள் தாழ்ந்து போவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
அஷ்டம ஸ்தானத்தைப் புதையல் ஸ்தானம் என்றும் கூறுகிறோம். அஷ்டம ஸ்தானம் சிறப்பாக வலுத்திருப்பவர்கள் வாழ்க்கையில் உன்னதமாக வாழ்வதையும் அயன ஸ்தானம் வலுத்திருப்பவர்கள் வெளிநாட்டில் சிறப்பாகக் கோலோச்சுவதையும் பார்க்கிறோம். அதனால் இந்த ஒட்டுமொத்த கலவையிலேயே நம் வாழ்க்கை பிணைக்கப்பட்டுள்ளது. கிரகங்களின் தசா புக்தி, கோசாரம் ஆகியவற்றிற்கு ஏற்ப காலச்சூழல்கள் மாறுபடுகின்றன. "வாழ்நாள் முழுவதும் கோட்டைக்குள் கொடிகட்டி வாழ்ந்தவனுமில்லை, வாழ்நாள் முழுவதும் திருவோடு ஏந்தி திரிந்தவனுமில்லை' என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மதி என்னும் அறிவை விட கிரகவிதி பெரிதென்பதால் தெய்வபக்தியும் தெய்வ அருளும் சுற்றமும் செல்வமும் மனஉறுதியும் கூட கெட்ட கிரக தசையில் பயனளிக்காது. இதையே திருவள்ளுவர்,
"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்'
- என்கிறார். அதாவது, காலநேரத்தைப் புரிந்து (யோக தசா புக்தி, திதி, நட்சத்திரம், ஹோரை) அறிந்து நடப்பவன் உலகத்தையே வெல்ல நினைத்தாலும் கைகூடும்.
பொதுவாக, உபய லக்னங்களுக்கு கேந்திர ராசிகளுக்கு அதிபதிகளாக வரும் சுப கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்றும், ஏழாம் வீட்டிற்கு அதிபதிகளாக வரும் கிரகங்களுக்கு இத்துடன் பாதகாதிபத்ய தோஷம் மற்றும் மாரகாதிபத்ய தோஷமும் உண்டாகும். இதற்கு பல விதி விலக்குகளும் உண்டு. உங்கள் தாம்பத்யம் ஏறத்தாழ 35 ஆண்டுகள் நடந்திருக்கிறது என்று பார்க்கும்பொழுது புதபகவான் உங்களுக்கு சுபபலத்துடன் இருக்கிறார் என்று பொருள் கொள்ள வேண்டும். உங்களுக்கு தற்சமயம் புதபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் ஏஜென்ஸி தொழில் ஏற்றதாக அமையும். பொருளாதார வளம் பெருகத் தொடங்கும். இன்னும் 9 ஆண்டுகள் பொற்காலமாக அமையும். உங்கள் ஜாதகத்தைப் பொருள் ஜாதகமே என்று கூறலாம். பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.