எனது வேலையில் உழைப்புக்கேற்ற வருமானம் இல்லை. எனக்கு எதிரிகள் அதிகமாக உள்ளார்கள். எனக்கு எப்பொழுது மாறுதல் ஏற்படும்? என் தாயின் உடல் நிலை எப்பொழுது குணமடையும்? தந்தையுடனும் இணக்கமான சூழ்நிலை இல்லை. எனது மேற்படிப்பில் வெற்றி பெறுவேனா?
வாசகி, சென்னை.
உங்களுக்கு கும்ப லக்னம், கும்ப ராசி, சதயம் நட்சத்திரம். லக்னம், பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதியான சனி பகவான் அயன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று புத, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். சுக பாக்கியாதிபதியான சுக்கிர பகவான் குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். குடும்பாதிபதி மற்றும் லாபாதிபதியான குரு பகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று கேது பகவானுடன் இணைந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சனி, ராகு, புத பகவான்களையும், ஒன்பதாம் பார்வையாக தன ஸ்தானமான தன் ஆட்சி வீட்டையும் அங்கு உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானாதிபதியுமான செவ்வாய் பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து, களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டையும், தொழில் ஸ்தானமான தன் ஆட்சி வீட்டையும், லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.
உங்கள் ஜாதகம் சராசரிக்கும் சற்று கூடுதலான பலம் பெற்றிருக்கிறது என்று கூறவேண்டும். தற்சமயம் சனி பகவானின் தசையில் சந்திர பகவானின் புக்தி தொடங்க இருப்பதால், இந்த மாதத்திலிருந்து உங்களின் வாழ்க்கையில் மலர்ச்சி உண்டாகத் தொடங்கும். வருமானமும் படிப்படியாக உயரும். அனைத்து விஷயங்களிலும் எதிர்ப்புகள் நீங்கி வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்களுக்கும் நன்மைகள் உண்டாகிவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.