சுபவோசி யோகம்

நான் 13 வயதிலிருந்து என் உறவினர்க்கு 30 ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். எனது உழைப்புக்கு கிடைக்க வேண்டியவைகள் கிடைக்கவில்லை. தனியாகப் பிரிந்து தொழில் செய்ய உகந்த நேரமா?
Updated on
3 min read


நான் 13 வயதிலிருந்து என் உறவினர்க்கு 30 ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். எனது உழைப்புக்கு கிடைக்க வேண்டியவைகள் கிடைக்கவில்லை. தனியாகப் பிரிந்து தொழில் செய்ய உகந்த நேரமா? என் ஜாதகம் யோக ஜாதகமா? ஆயுள் எப்படி உள்ளது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

-வாசகர். 

உங்களுக்கு மிதுன லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம். பொதுவாக சந்திர பகவான் உச்சம் (அ) ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. நற்குணமும், கருணை தயாள குணமுண்டாகும். தியாகம் செய்யக்கூடிய மனம் உண்டு. பொறுமைசாலி. இரட்டைப் பொருள்பட நயமாகப் பேசுவார். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். 

பன்னிரண்டாம் வீடு விரய ஸ்தானம் என்று பெயர் படுகிறது. பன்னிரண்டாமிடத்தைக் கொண்டு ஜாதகருடைய செலவினங்கள், தூக்கம், படுக்கை சுகம், பயணம், நாணயம், வாழ்வின் முடிவு முதலியவற்றைத் தெரிந்து கொள்ளலாம். அதோடு, உடலில் இது பாதத்தைக் குறிக்கும் இடமாகும். 

பொதுவாக, விரய ஸ்தானாதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருக்க வேண்டும். கேது பகவான் மோட்சக் காரகராகி பன்னிரண்டாம் வீட்டில் இருக்க சிறப்பு. இப்படியிருந்தால் அது முக்திக்கு வழியாகும் என்பது ஜோதிட விதி. விரய ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் ஆவதால் களத்திரத்திற்கும் (கணவர், மனைவி) ஆடம்பர வாழ்க்கைக்கும் அதிகமாக செலவு செய்வார். 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான கடக ராசியை அடைகிறார். 

தனாதிபதி ராசியிலும், நவாம்சத்திலும் அதிக பலம் பெற்றிருப்பதால் ஒரு காலத்தில் அனாவசிய, எதிர்பாராத செலவுகள் உண்டானாலும், வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சி உண்டாகி, பொருளாதாரத்திலும் மேன்மை உண்டாகி உயர்வான நிலையை எட்டி விடும் யோகம் உள்ளது என்று கூறவேண்டும். 

ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில், சுய சாரத்தில் (மிருக சீரிஷ நட்சத்திரம்) நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ஆறாம் வீட்டுக்கதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது விபரீத ராஜ யோகமாகும். மேலும் ஆறாம் வீட்டிற்கு ஏழாம் வீட்டிலும், லாப ஸ்தானத்திற்கு தன ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டிலும் அமர்ந்து இருப்பது சிறப்பு. சந்திர பகவானுடன் செவ்வாய் பகவான் இணைந்திருப்பது சந்திர மங்கள யோகமாகும்.  

இதனால் உடன் பிறந்தோரின் நலம் மேன்மையடையும். அசையாச் சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகி அவைகளில் இருந்து தொடர் வருமானம் கிடைக்கும். 

அரசு வழியில் தேவையான உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். செய்தொழிலில் நல்ல பெயரும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையும் கிடைக்கும். கடினமான விஷயங்களிலும் கவனமாகச் சிந்தித்து சரியான முடிவெடுக்கும் ஆற்றலும் உண்டாகும். 

லக்னம், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். 

புத பகவான் சுப கிரகமாகி கேந்திர வீடுகளுக்கு அதிபதியாவதால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். லக்னாதிபத்யம் உண்டாவதாலும், எட்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பதாலும், சுபாவ அசுபக் கிரகமான சூரிய பகவானுடன் இணைந்திருப்பதாலும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. மறைந்த புதன், நிறைந்த மதி, நிறைந்த நிதி என்பதும் ஜோதிட வழக்கு. 

புத பலம் மிகுந்தவர்கள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள். தாங்கள் ஈடுபட்டிருக்கும் தொழிலில் உள்ள நுணுக்கங்களை எளிதில் கற்றுக் கொண்டு விடுவார்கள். 

தங்களைக் குறை கூறுபவர்களையும் தக்க அறிவுரை கூறித் திருத்தி விடுவார்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வார்கள். 

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். மூன்றாம் வீட்டுக்கதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது விபரீத ராஜ யோகத்தைக் கொடுக்கும். சூரிய, புத பகவான்களின் இணைவு நிபுணத்துவ யோகமாகும். 

இனிமையான பேச்சினால் செய்தொழிலில் புதிய இலக்குகளை எட்டும் யோகம் உண்டாகும். அதோடு உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை, அரசு வழியில் நன்மை, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து ஆகியவை உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சுய சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.

சூரிய பகவான் நின்ற ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிர பகவான் அமர்ந்திருந்தால் அது சுபவோசி யோகமாகும். இதனால் சுக்கிர பகவானின் காரகத்துவம் பெற்ற இனங்களிலிருந்து அனுகூலங்கள் உண்டாகும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாகும். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்து பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகத்தைக் கொடுக்கிறார். 

இந்த யோகத்தால் செல்வம், செல்வாக்குடன் அதிகார தோரணையும் உண்டாகும். தொழில் ஸ்தானம் உன்னதமான சுப பலம் பெறுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும் படிகிறது. பொதுவாக சனி பகவானுடன் குரு பகவான் இணைந்தோ அல்லது பார்வை செய்தால் சனி பகவான் சுப பலம் பெறுவார். மேலும் சனி பகவானின் ஆதிபத்யம் விசேஷமாக வேலை செய்யும். 

சுப ஆதிபத்யம் பெறாத சனி பகவானால் விளையக் கூடிய கெடு பலன்கள் குறைந்து விடும். மற்றபடி பூமியினால் லாபம் உண்டாகும். நிலக்கரி, எண்ணெய், ஈயம் சார்ந்த துறைகளிலும் ஈடுபடலாம். பொதுநலப் பணிகளில் இயற்கையாகவே ஈடுபாடு உண்டாகும். குரு பகவானின் ஏழாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும் படிகிறது. 

அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுய சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். சனி பகவான் நேர்பார்வையாக தன் ஆட்சி வீடான அஷ்டம ஸ்தானத்தையும் (மகர ராசி) அங்கமர்ந்திருக்கும் புத ஆதித்யர்களையும் பார்வை செய்கிறார். 

அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தைப் பார்வை செய்வது தீர்காயுள் யோகமாகும். ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். கேது பகவான் லாப ஸ்தானத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்த்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 

உங்களுக்கு தற்சமயம் பாக்கியாதிபதியான சனி பகவானின் தசையில் சுய புக்தி இன்னும் இரண்டாண்டுகள் நடக்கும். அதற்குப் பிறகு சொந்தமாக தனித்துத் தொழில் செய்யலாம். சனி பகவானின் தசை யோக தசையாகவே செல்லும். 

நீங்கள் தற்சமயம் செய்து வரும் தொழிலிலேயே ஈடுபடலாம். சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com