என் மகளுக்கு இரண்டு மகன்கள். இரண்டாம் மகன் 4 மாதங்களுக்கு முன்பு பிறந்தான். பிறக்கும் பொழுது இரண்டு பாதங்களும் ஒன்றை நோக்கி ஒன்று பார்த்தபடி இருக்கப் பிறந்தான். இதனை, கிளப் புட் என்பார்கள். தற்சமயம், மாவுக்கட்டு போட்டு ஷூ போட்டிருக்கிறார்கள். அவன் ஜாதகம் எவ்வாறு இருக்கிறது? எப்போது சரியாகும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மேலும் என் மூத்த பேரனின் எதிர்காலம் , வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
வாசகர், சென்னை
உங்கள் பேரனுக்கு கன்னி லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சுய சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான கடக ராசியை அடைகிறார். லாப ஸ்தானாதிபதி ராசியிலும் நவாம்சத்திலும் வலுத்திருக்கிறார். லாப ஸ்தானம் வலுத்திருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபடவும், அவற்றால் ஆதாயம் பெறவும் வாய்ப்புண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பாலும் பலன் கூடப்பெறலாம். பதினொன்றாம் வீடு வலுத்திருக்கும் பட்சத்தில் அறிவின் பரந்த ஆகாசத்தில் சஞ்சாரம் செய்கின்ற அபரிமிதமான ஆற்றலும் சுப கருமங்களைச் செய்கின்ற வாய்ப்பும் வசதிகளும் ஏற்படக்கூடும். சந்திரபகவான் அன்னை காரகராகவும் ஆவதால் உங்கள் மகளுக்கு உயர்வுகள் ஏற்படும். பதினொன்றாமதிபதி பதினொன்றாம் வீட்டை (தன் வீட்டை) பார்வை செய்வதும் சிறப்பு. பதினொன்றாம் வீடு மூத்த சகோதர ஸ்தானமாகவும் ஆவதால் இவரின் மூத்த சகோதரரின் உயர்வும் சிறப்பாக அமையும் என்றும் கூறலாம். சந்திரபகவான் வலுத்திருப்பதால் மனோபலம் ஏற்படும். கற்பனை வளம், சிந்தனா சக்தியும் கூடும். கண்களின் பார்வை சீராக பராமரிக்கப்படும். 3, 6, 10, 11} ஆம் வீடுகள் உப ஜய ஸ்தானங்களாகும். இதில் பதினொன்றாம் வீடு சிறப்பான உப ஜய ஸ்தானமாக (வெற்றிக்கு உதவும் இடம்) கருதப்படுகிறது. தனம் (பொருள்) ஸ்தானமாக 2, 9, 11 }ஆம் வீடுகள் வருகின்றன. பதினொன்றாம் வீடு சிறப்பான தன ஸ்தானமாகவும் பணபர ஸ்தானமாகவும் அமைகின்றது. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
தன ஸ்தானத்தில் தன் நட்பு வீட்டில் புதபகவான் அமர்ந்திருப்பதும் தன யோகமாகும். கல்விக்காரகராக இருப்பதால் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்று நேர்மையுடன் பொருள் சேர்ப்பார் என்று கூறவேண்டும். அதோடு மற்றையோருக்கு தக்க அறிவுரைகளை வழங்கும் ஆற்றலும் உண்டாகும். அதாவது அனைத்து விஷயங்களையும் தான் சரியாகப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் புரிய வைப்பார். அதோடு, சந்திர கேந்திரத்தில் அமர்ந்திருக்கும் புதபகவான் எழுத்து, கலை, இலக்கியம், ஜோதிடம் போன்ற துறைகளில் இயற்கையாகவே நாட்டம் ஏற்படும். சொல்லும் சொல், வாக்கு பலிதம் போன்ற எல்லாமும் கூடப் பெரும் பயன் தருவதாக அமையும். புதபகவானை கணக்கன் என்பதால் கணிதம், காமர்ஸ் படிப்புகள் ஏற்றதாக அமையும். கணினி துறையும் வெற்றி கொடுக்கும் . பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். சுபாவ அசுப கிரகங்களுக்கு கேந்திர ஸ்தானங்களில் பலம் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு விரய ஸ்தானத்தில் இருந்தாலும் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானத்திற்கு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். சனிபகவானின் மூன்றாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் ராகுபகவானின் மீதும், பத்தாம் பார்வை லக்னத்தின் மீதும் படிகின்றது. லக்னத்தை சனிபகவான் பார்வை செய்வது மகாகீர்த்தி யோகம் என்றழைக்கப்படுகிறது. நான்காம் வீட்டில் பலம் பெற்ற சனிபகவான் குடும்பத்தில் சுகம், நிம்மதி இரண்டையும் வழங்குவார்.
தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுய சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். இதனால் வீடு, நிலம், வாகனம் ஆகியவைகள் சுலபமாகக் கிடைக்கும். இரண்டாம் வீட்டோனும் லக்னாதிபதியும் வலுத்திருப்பதால் வருமானம் நிரம்ப கிடைத்து சேமிப்பும் அதிகமாகும். ஒன்பதாமதிபதி பலம் பெற்றிருப்பதால் மற்றையோர் பாராட்டும் வகையில் சாதனைகளைச் செய்யும் சக்தியும் கர்ம யோகத்தில் தேர்ச்சியும் ஆன்மிக ஞானமும் கிடைக்கும். மேலும் தந்தை நலம் ஓங்கும். பூர்வீகச் சொத்துகள் வளர்ச்சியடையும். நெடுந்தூரப்பயணங்கள், பல நாடுகளுக்குச் சென்று வருதல் ஆகியவையும் அமையும். சுக ஸ்தானத்தில் இரண்டு திரிகோணாதிபதிகளான சனி, சுக்கிரபகவான்கள் இணைந்திருப்பதும் சிறப்பாகும். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். செவ்வாய்பகவானின் நான்காம் பார்வை மகர ராசியின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திரபகவானின் மீதும் (சந்திர மங்கள யோகம்) ஏழாம் பார்வை தன் ஆட்சி வீடான அஷ்டம ஸ்தானத்தையும் எட்டாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறாôர். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
பொதுவாக, சுப கிரகங்கள் கேந்திர ராசிக்கு அதிபதியாக வந்தால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்பது ஜோதிட விதி. அந்த கேந்திராதிபத்ய தோஷம் பெற்றுள்ள கிரகத்தை அசுப கிரகங்கள் பார்வை செய்தாலோ அல்லது இணைந்திருந்தாலோ கேந்திராதிபத்ய தோஷம் முழுமையாக நீங்கிவிடும். குருபகவானுடன் சனி, கேது பகவான்கள் இணைந்திருப்பதால் அவருக்கு கேந்திராதிபத்ய தோஷம் முழுமையாக நீங்கி விடுகிறது . அதனால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார். அதோடு அந்தணனாகிய குருபகவான் மூன்று கிரகங்களுடன் சேர்ந்திருப்பது சிறப்பாகும். குருபகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் ராகுபகவானையும், ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். கேதுபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ராகுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
பொதுவாக, பிறப்பு கோளாறுகளுக்கு பித்ரு தோஷம் காரணம் என்று பொத்தாம் பொதுவாக கூறுவார்கள். அவருக்கு பித்ரு காரகரான சூரியபகவான் அயன ஸ்தானாதிபதியாகி தைரிய முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருப்பது சிறப்பு. அதோடு பித்ரு ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார். பாதத்தைக் குறிக்கும் ராசி மீனமாகும். அந்த ராசிக்கு அதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ஸ யோகத்தைக் கொடுக்கிறார். இதனால் அவருக்கு பாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக தீர்ந்து விடும். எதிர்காலம் பிரகாசமாக அமையும். பிரதி திங்கள் கிழமைகளில் பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.