என் பேரனின் ஜாதகமிது. சித்திரை , உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஒன்பதில் ராகு இருப்பவர்களுக்கும் தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகுமா? இரண்டாம் வீட்டுக்கதிபதியான குரு பன்னிரண்டிலும் சனி இரண்டிலும் இருப்பதைப் பற்றி கூறவும். அவருக்கு சுக்கிரன் எட்டில் மறைகிறார். இது குறையா? குணநலன் பாதிக்குமா? அஷ்டவர்க்கத்தில் சூரியன், புதன் இருவருக்கும் குறைந்த பரல்கள் கிடைத்திருக்கிறது. புதன் எட்டாமதிபதியாவதால் ஆயுள் பாதிப்பு உண்டாகுமா? செவ்வாய், சந்திரனுடன் கேது இணைந்திருப்பது இவர்களின் பலத்தைக்

உங்கள் பேரனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான்

உங்கள் பேரனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் தைரிய முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சூரியபகவானின் (உத்திராடம் நட்சத்திரம்) சாரத்தில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். இதனால் பாக்கியாதிபதி சிறப்பான நிலையில் அமர்ந்திருக்கிறார் என்று கூற வேண்டும். ஒன்பதாமிடமென்பது உச்சதிரிகோணமாகும். இதனதிபதி பலமாக இருப்பதால் மனம் எப்போதும் தெளிவான நிலையில் இருக்கும். பெற்றோருடனும் மூத்தவர்களுடனும் பெரிய கருத்து வேறுபாடுகள் எதுவும் ஏற்படாது அவர்களுடன் இணக்கமாக வாழும் சூழ்நிலை உண்டாகும். பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கவும் யோகங்கள் உண்டாகும். பாக்கியாதிபதி மூன்றாம் வீட்டிலிருந்து ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்வதால் பயம். பீதி, குழப்பம் எதுவும் உண்டாகாமல் துணிந்து செயல்களைச் செய்யும் ஆற்றலும் உண்டாகும்.
 ஆன்மிகம், தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகளும் தானாகவே ஏற்படும். பொது நிதியை நிர்வகிக்கும் வாய்ப்புகளும் ஏற்படும்.சமூகத்தில் நம்பிக்கைக்குரியவர் என்கிற பெயர், புகழ் கிடைக்கும். சந்திரபகவான் ஒன்பதாமதிபதியாவதால் கற்பனைத்திறன் கூடும். சிந்தனையாளர் என்றும் பெயர் பெறுவார். லக்னம் மற்றும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சந்திரபகவானின் (திருவோண நட்சத்திரம்) சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலதிரிகோண வீடான மேஷ ராசியை அடைகிறார். லக்னாதிபதி உச்சம் பெறுவதும் ஆறாமதிபதி விபரீத ராஜயோகம் (ஆறாமதிபதி மூன்றில்) இருப்பதும் சிறப்பாகும். லக்னாதிபதி உச்ச பலத்துடன் இருப்பதால் உடல் ஆரோக்கியம் சீரும் சிறப்புமாக அமையும். தன்னம்பிக்கையும் கூடும். கடன் தொல்லைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். வம்பு வழக்குகளும் ஏற்படாது. அதோடு செவ்வாய்பகவானின் நான்காம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானின் மீதும், எட்டாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது. இதனால் செவ்வாய்பகவானின் ஆதிபத்யங்களான விஞ்ஞானம், பொறியியல், சட்டம், பூமி, உணவு, ராணுவம் சம்பந்தப்பட்ட படிப்புகளிலும் வெற்றி பெறும் வாய்ப்புகளும் உண்டாகும்.
 சந்திரமங்கள யோகம் உண்டாவதால் அன்னையின் நலனும் சீர்படும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணியம், புத்திரம், புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் மீதும் படிகிறது. இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அதாவது குருபகவான் எட்டாம் வீட்டைப் பார்வை செய்வதால் அபவாதமோ, கண்ணியக் குறைவான நிகழ்ச்சியோ உண்டாகாது. எட்டாம் வீட்டை புதையல் வீடு என்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் யோக பாக்கியங்களும் உண்டாகும்.
 தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன, மோட்ச, விரய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சுக்கிரபகவான் பெண் கிரகமாவார். வீடு வாகனம் ஆகியவைகளுக்குக் காரகராவார். உல்லாசத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் அதிகாரியாவார். மாந்தர்களுக்கு நல்ல கணவர்/ மனைவி அமைய சுக்கிரபகவானின் அருள் நிரம்ப தேவை.
 ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கைத்துணை அமைந்துவிட்டாலே மற்ற அனைத்து சௌபாக்கியங்களும் தானாகவே அமைந்துவிடும். வசீகரமான உடல் தோற்றத்திற்குச் சுக்கிரபகவானே காரணமாகிறார். பெயிண்ட, சிமெண்ட், வெள்ளி, அதிநவீன ஆடம்பரப் பொருள்களும் சுக்கிரனில் அடக்கம். வெள்ளி சம்பந்தப்பட்ட தொழிலில் அதிக முன்னேற்றத்தைக் கொடுப்பார். அதேநேரம் அசுப பலம் பெற்ற சுக்கிரபகவான் பெண்களின் மூலம் அவமானங்களையும் விரோதங்களையும் உண்டாக்கிவிடுவார். மேலும் நாளமில்லாச் சுரப்பி உபாதைகளும் உண்டாகி விடும். தகுதியற்றவர்களின் தொடர்பினால் கஷ்டங்கள் வந்து சேரும். பொதுவாக, சுக்கிரபகவான் மறைவு ஸ்தானங்களான 3, 6, 8, 12 }ஆம் வீடுகளில் இருப்பதைக் குறை என்று கூறுவார்கள். அதேநேரம் சுக்கிரபகவானுக்கு பன்னிரண்டாம் வீடு மறைவு ஸ்தானமல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. பலம் பெற்ற சுக்கிரபகவான் கலைத்துறையில் நாட்டத்தை உண்டாக்குவார். அதன்மூலம் பொருளாதார சுபிட்சத்தையும் உண்டாக்குவார். உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களைச் செய்து வருமானம் ஈட்டச் செய்வார். வைரம், நகைத் தொழிலிலும் ஈடுபடுவார்கள். புத்திரோற்பத்திக்கு காரணமான சுக்கிரபகவான் ஆண்களுக்கு சுக்கிலத்துக்கும் பெண்களுக்கு கருமுட்டைக்கும் வலு சேர்க்கிறார். அவருக்கு சுக்கிரபகவான் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் குணநலன்களில் குறை என்று எதுவும் ஏற்படாது.
 அஷ்டம ஸ்தானம் வலுவாக அமைவதால் தீர்க்காயுள் உண்டு. மேலும் பன்னிரண்டாமதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதால் விபரீத ராஜயோகமும் உண்டாகிறது. அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். கல்விக்காரகரான புதபகவான் நட்பு ஸ்தானத்திலிருந்து லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு. பொதுவாக, புதபகவான் வலுத்திருந்தால் புத்திக் கூர்மை உண்டு. கடினமான விஷயங்களையும் சுலபமாகப் புரிந்து கொள்ளுவார். தொழில் காரகரான சூரியபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் சந்திரபகவானின் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவானும் லாபாதிபதியான புதபகவானும் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து சிறப்பான புதஆதித்ய யோகத்தைப் பெறுகிறார்கள். இதை நிபுணத்துவ யோகம் என்றும் கூறுவார்கள்.
 புதபகவான் 2 பரல்களும் சூரியபகவானுக்கு 3 பரல்களும் ரிஷப ராசிக்கு 21 பரல்களும் கிடைத்திருக்கின்றது. மேலும் புதபகவானுக்கு ஏழாம் வீடு பலம் குறைந்த வீடு என்றும் கூறவேண்டும். இது அவர் திக்பலம் பெறும் லக்னத்திற்கு நேர் எதிர் வீடாகும். இதனால் சில நேரங்களில் மறதி, சோம்பல் உண்டாகி விடக்கூடும். மற்றபடி, புதஆதித்ய யோகத்திற்கு பங்கம் எதுவும் உண்டாகாது. மேலும் லக்னத்திற்கு 30 பரல்களும் தொழில் ஸ்தானத்திற்கு 31 பரல்களும் லாப ஸ்தானத்திற்கு 31 பரல்களும் கிடைத்திருப்பதால் தொழில் ஏற்றமாகவே அமையும். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். கேதுபகவான் தைரிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். ராகுபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருப்பதை குறை என்று பார்க்க முடியாது.
 அதேநேரம் பாக்கியாதிபதி சுபபலம் பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் பெற்றோருக்கும் ஜாதகருக்கும் இறுதிவரை சுமுகமான உறவே தொடரும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் படிப்பில் குறை என்று எதுவும் உண்டாகாது. அதுபோல் லக்னாதிபதி, பாக்கியாதிபதிகளுடன் கேதுபகவான் இணைந்திருப்பதால் இரண்டு திரிகோணாதிபதிகளுக்கும் பாதிப்பும் ஏற்படாது. தற்சமயம் நடக்கும் சூரியமகா தசை இன்னும் இரண்டாண்டுகள் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குப்பிறகு தொடரும் சந்திரமகா தசையில் அவரின் பெற்றோருக்கு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதி பூத்துக் குலுங்கும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com