என் சகோதரர் கணினித் துறையில் நல்ல வேலையில் உள்ளார். பதவி உயர்வு கைக்கு வரவில்லை. ஆனால் உயர் பதவிக்குரிய வேலைகளைச் செய்து வருகிறார். திருமணமும் தட்டிக் கொண்டே செல்கிறது. எப்பொழுது திருமணம் நடக்கும்...
By DIN | Published On : 02nd July 2021 04:34 PM | Last Updated : 02nd July 2021 04:34 PM | அ+அ அ- |

என் சகோதரர் கணினித் துறையில் நல்ல வேலையில் உள்ளார். பதவி உயர்வு கைக்கு வரவில்லை. ஆனால் உயர் பதவிக்குரிய வேலைகளைச் செய்து வருகிறார். திருமணமும் தட்டிக் கொண்டே செல்கிறது. எப்பொழுது திருமணம் நடக்கும்... பதவி உயர்வு எப்பொழுது கிடைக்கும்..?
- வாசகர், சென்னை.
உங்கள் சகோதரருக்கு கடக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி, தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார்.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவானுடன் இணைந்து (தர்மகர்மாதிபதி யோகம்) இருவரின் பார்வையும் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தின் மீது படிகிறது.
செவ்வாய், குரு பகவான்கள் நவாம்சத்தில் முறையே மேஷ, மீன ராசிகளை அடைந்து ஆட்சி பெறுகிறார்கள்.
தனம், வாக்கு, குடும்பாதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கும் சுக லாபாதிபதியான, உச்சம் பெற்ற சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார்.
சர்ப்ப கிரகங்கள் கேது, ராகு பகவான்கள் இரண்டு, எட்டாம் வீடுகளில் அமர்ந்திருக்கிறார்கள். எட்டாம் வீட்டில் புத, ராகு பகவான்கள் இணைந்திருக்கிறார்கள். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் (ஏழாம் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடு) அமர்ந்திருப்பது சிறு குறைதான் என்றாலும், குரு பகவானின் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீது படிவதாலும், தற்சமயம் ராகு பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதாலும் இந்த ஆண்டே பதவி உயர்வு கிடைத்து விடும். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.