என் மூத்த மகன் பஹ்ரைன் நாட்டில் வசிக்கிறார். அவரின் வீட்டிற்கு அடுத்த வீடும் அவருடையதே. அந்த வீட்டை இடித்துவிட்டு கல்யாண மண்டபம் கட்டலாமா..? அல்லது சிறிது தூரத்தில் மளிகைக் கடை தொடங்கலாமா..?
By DIN | Published On : 09th July 2021 03:48 PM | Last Updated : 09th July 2021 03:48 PM | அ+அ அ- |

என் மூத்த மகன் பஹ்ரைன் நாட்டில் வசிக்கிறார். அவரின் வீட்டிற்கு அடுத்த வீடும் அவருடையதே. அந்த வீட்டை இடித்துவிட்டு கல்யாண மண்டபம் கட்டலாமா..? அல்லது சிறிது தூரத்தில் மளிகைக் கடை தொடங்கலாமா..? அண்ணன் தம்பி உறவு எப்படி இருக்கும்..?
-வாசகர், கடலூர்.
உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷம் நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானம் ஆகிய வீடுகளுக்கு அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள லாபாதிபதியுடன் இணைந்திருக்கிறார்.
ஒன்பதாமதிபதி சுக்கிர பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானாதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் தர்ம கர்மாதிபதி யோகத்தைப் பெறுகிறார்.
பூர்வ புண்ணியாதிபதி, ஆறாமதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து ஐந்தாம் வீட்டைப் பார்வை செய்கிறார்.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று ஐந்தாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானையும், ஏழாம் பார்வையாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும், ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானமான (தன் மூலத் திரிகோண வீடான) நான்காம் வீட்டையும் பார்வை செய்கிறார்.
தற்சமயம் அவருக்கு சனி பகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அதனால் கல்யாண மண்டபம் கட்டுவதோ அல்லது மளிகைக் கடை வைப்பதோ கூடாது. தற்சமயம் புது முயற்சி எதுவும் செய்ய வேண்டாம். பரிகாரம் தேவையில்லை. மற்றபடி சகோதரர்களுடன் இறுதிவரை இணக்கமாக இருப்பார்.