சச மஹா யோகம்!
By DIN | Published On : 12th March 2021 06:24 PM | Last Updated : 12th March 2021 06:24 PM | அ+அ அ- |

எனக்கு எப்பொழுது திருமணம் ஆகும்? வரன் படித்தவராகவும், தொழில் செய்பவராகவும் கிடைப்பாரா? எந்தத் திசை? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா?
-வானதி, நாட்டறம்பள்ளி.
உங்களுக்கு சிம்ம லக்னம், கடகராசி, பூசம் நட்சத்திரம். லக்னாதிபதி சூரிய பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்து மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டுக்கும் அதிபதியான குரு பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுக்கிர, புத, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார்.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டுக்கு அதிபதியான சனி பாகவான் களத்திர நட்பு ஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகத்தைப் பெறுகிறார்.
சுக பாக்கியாதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் நீச்சம் பெற்று, அங்கு ஆட்சி பெற்றுள்ள சந்திர பகவானுடன் இணைந்திருப்பதால் நீச்ச பங்க ராஜ யோகத்தைப் பெறுகிறார்.
தற்சமயம் பலம் பெற்றுள்ள புத மஹா தசையில் செவ்வாய் பகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல வேலையிலுள்ள வரன் தென்கிழக்கு திசையில் இருந்து அமைந்து திருமணம் கைகூடும்.
வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். எதிர்காலம் வளமாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.